பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

மகாபாரதக் காட்சிகளும் நிறைந்திருக்கும். இன்னும் எண்ணற்ற தெய்வ வடிவங்களும் அச்சுவர்களில் உப்புச உருவில் உருவாக்கி நிற்கும் கோயிலுள் நுழைந்தால், அங்குள்ள தூண்களும் விதானமும் பலபல விசித்திர வேலைகள் நிரம்பியதாய் இருக்கும். இக் கோயிலுள் மூன்று சந்நிதிகள். பிரதானமாக நிற்பவன் கேசவன். வட பக்கத்தில் தெற்கே பார்க்க நிற்பவன் ஜனார்த்தனன். தென் புறத்தில் வடக்கே பார்க்க நிற்பவன் கோபாலன். இங்குள்ள ஜனார்த்தனனும், கோபாலனும் மிக அழகு வாய்ந்தவர்கள், அத்தனை அழகை கேசவன் பெற்றிருக்கவில்லை. காரணம் ஆதியில் செய்யப்பட்ட கேசவன் இன்று அங்கு இல்லை. அவன் மிக்க அழகுள்ளவனாகவும், கோயில் பூரணப் பொலிவுடையதாகவும் அமைந்து விட்ட காரணத்தால், வானுலகிலுள்ள தேவர்கள் இக்கோயிலைத் தாங்கள் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல விரைந்திருக்கின்றனர். கோயிலுக்கு இறக்கைகள் முளைத்து வான் வீதியில் கிளம்பியிருக்கிறது. இதை அறிந்த சிற்பி, கேசவன் வடிவிலே ஒரு ஊனத்தை ஏற்படுத்தி, அதன் பூரணத்துவத்தைக் குலைத்திருக்கிறான். அது காரணமாக வான வீதியில் எழுந்த கோயில் திரும்பவும் பூமியில் இறங்கியிருக்கிறது. இறங்கும் போது கொஞ்சம் விலகி இறங்கிவிட்டதினாலேதான் கோயில் வாயிலில் இருக்க வேண்டிய கருட கம்பம், வாயிலை விட்டு விலகியிருக்கிறது. இப்படி ஒரு கற்பனைக் கதை. கோயிலையும் அங்குள்ள சிற்ப வடிவங்களையும் கண்டால் இந்தக் கதை கூட உண்மையாகவே இருக்குமோ என்றுதான்

59