பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

குடைந்து குகைக் கோயில்களை வெட்டிக் கொண்டிருந்தான் என்றால், மகனோ மலைகளையே செதுக்கி, வெட்டிக் குடைந்து அதி அற்புதமான ரதக் கோயில்களையெல்லாம் உருவாக்கிக் கொண்டிருந்திருக்கிறான். அப்படி வெட்டிச் செதுக்கிய கோயில்களின் சுவர்களில் - நல்ல கற்பாறைகளில்தான் - பகீரதன் தவத்தையும், கோவர்த்தன தாரியையும் அனந்த சயனனையும், மகிஷமர்த்தினியையும் உயிர் பெறச் செய்திருக்கிறான். கோயில் நிர்மாணத்தையே அடிப்படைத் திட்டமாக வைத்துக் கொண்டு அற்புத உருவங்களை அமைத்துக் கொடுத்தவர்கள் பல்லவ அரசர்கள். அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும், அவர்கள் அமைத்த கற்கோயில்களைப் போலவே.

இவர்களுக்குப் பின் வந்த சோழ மன்னர்களும் இந்தச் சிற்பக் கலையை வளர்ப்பதில் கொஞ்சமும் சளைத்தவர்களாக இருக்கவில்லை. மலையைக் குடையவோ, பாறைகளை வெட்டிச் செதுக்கவோ முனையாவிட்டாலும், உபானம் முதல் ஸ்தூபி வரையிலும் கல்லாலேயே கோயில் கட்டிய பெருமை இவர்களைத்தான் சாரும். ‘எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட கோச்செங்கணான்’ பரம்பரையில் வந்த , சோழர்கள் அமைத்த கற்றளிகள் சோழ வளநாடு முழுவதும் இன்றும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். சோழ மன்னர்கள் காலத்தில் அவர்களது சாம்ராஜ்யம் எவ்வளவு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர்கள் கட்டிய கோயில்களின் மூலமும், அக்கோயில்களின் கர்ப்பக் கிருஹங்களின் பேரில் கம்பீரமாக வானளாவ வளர்ந்து நிற்கும் விமானங்களின் மூலமுமே தெரிந்து

64