உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

கலையில். ஆனால், நமது தமிழர்கள் இருக்கிறாரகளே, இவர்கள் வடித்த சிலைகளில் எலும்பும், தசையும், நரம்பும், தோலும் முக்கிய இடம் பெறுவதில்லை. மனிதர்களையே இவர்கள் உருவாக்கிக் காட்டுவது இல்லையே. விண் மறைக்கும் கோபுரங்களோடு கூடிய வினை மறைக்கும் கோயில்களைக் கட்டிய தமிழர்கள் இந்தக் கோபுரங்களில் எல்லாம் தெய்வத் திருவுருவங்களை சிலை உருவமாக அமைத்தார்கள். ஆண் உருவிலும் பெண் உருவிலும் இந்தச் சிற்ப வடிவங்களை அமைத்தாலும் ஏதோ தெருவில் நடமாடும் ஆடவர் பெண்டிரைப் போல அமைக்காமல், தெய்வீக அழகு நிரம்பியவர்களாக, அசாதாரணத் தன்மை வாய்ந்தவர்கள் என்று காண்போர், கண்டு தொழுவோர் உணரும்படியாக உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி காட்டுவதோடு அவர்கள் திருப்தி அடையவில்லை. எப்படி உருவாக்கினால் மக்கள் எண்ணத்தில் உயர்வார்கள் என்று எண்ணியிருக்கிறார்கள். கற்பனை பண்ணியிருக்கிறார்கள். கலை உருவங்களை சிருஷ்டித்திருக்கிறார்கள். கருத்துக்களை காட்டுவதற்குக் கருவியாகத்தான் கலையை உபயோகித்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் நான்கு முகமும், பன்னிருகரமும், எட்டுத் தோளும், எண்ணற்ற வடிவும் தெய்வத் திருவுருவங்களுக்கு அமைப்பானேன். 'எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டி நிற்பவனே இறைவன்' என்பதை விளக்கத்தானே இந்த அசாதாரணமான உருவங்களை அமைத்திருக்கிறார்கள்.

72