பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

வர்த்தி குலோத்துங்கன் வரை, அற்புதம் அற்புதமான சிற்பங்களைக் கல்லிலும், செம்பிலும் வடித்திருக்கிறார்கள். லிங்கோத்பவர், உமா மகேசர், கல்யாணசுந்தரர், கஜசம்ஹாரர், பிக்ஷாடனர், திரிபுராந்தகர் முதலிய தெய்வத் திருவுருவங்கள் எல்லாம் உருவானது இவர்கள் காலத்தில்தான். அழகழகான செப்புச் சிலைகளை, நடராஜரது திருஉருவங்களை எல்லாம் வடித்தெடுத்து, கலை உலகிலே தமிழர்களுக்கு ஒரு அரிய புகழையே தேடித் தந்தவர்கள் இந்த சோழ மன்னர்கள். சோழர்களோடு போட்டி போட முடியவில்லை பின் வந்த பாண்டியர்களால், ஆனால், சோழர்களது அடிச்சுவட்டில், 16,17ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்த நாயக்க மன்னர்கள் நடக்க விரைந்தனர். பெரிய பெரிய கோயில்களை, மண்டபங்களை, நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த சிலை உருவங்களை எல்லாம் நிர்மாணிக்க ஆரம்பித்தனர். அவர்கள் நிர்மாணித்த சிற்பக் கலைக் கூடங்களே தென் காசி காசிவிஸ்வநாதர் கோயில் மண்டபம், கிருஷ்ணாபுரத்து திருவேங்கடநாதன் சந்நிதியின் ரங்கவிலாசம், மதுரை மீனாக்ஷி கோயிலின் கம்பத்தடி மண்டபம், புது மண்டபம் முதலியவை. இப்படி ஆயிரம் வருஷத்திற்கு அதிகமாகவே அதாவது 6ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சிற்பக் கலை நன்றாக வளர்ந்து அதி உன்னத நிலை அடைந்திருக்கிறது. அதன் பின்தான் சென்று தேய்ந்திறுதல் என்றபடி இக்கலை வளரவில்லை, வளர்ப்பார், ஆதரிப்பார் இன்மையால்.

75