பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

விட்டது. எனக்கிருக்கும் வரபலத்தால் நல்ல அழகியாக நான் மாறிவிடக் கூடும். போன மூக்கையுமே திரும்பப் பெற்றுவிட முடியும். ஆனால், பெண்ணுக்கு மூக்கு என்பதொன்று அவசியம்தானா? மூக்கில்லா விட்டால் அழகு குறைந்தா போகும்? நல்ல சம ஒழுங்கில் இருக்கும் முகத்தில் மூக்கென்று ஒன்று நீண்டு உயர்ந்திருப்பது மிகையே அல்லவா” என்று கேட்கிறாள். இல்லை, ‘மேக்குயரும் நெடுமூக்கு மடந்தையர்க்கு மிகையன்றோ?’ என்று கம்பர் சூர்ப்பனகையைக் கேட்க வைக்கிறார். வாதம் ரொம்ப ரஸமாகத்தானே இருக்கிறது?

இந்தக் கேள்வி, கலா ரசிகை சூர்ப்பனகையிடமிருந்து மட்டும் பிறக்கவில்லை. இப்படிப்பட்ட சூர்ப்பனகை ரசிகர்கள் பலர் இன்று நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோ ஒரு கோயிலுக்குப் போய் அங்குள்ள சிலை உருவங்களைப் பார்க்கிறார்கள். ‘என்ன சார், இந்தச் சிலைகளில் எல்லாம் ஏன் இத்தனைக் கோணல் மாணல்கள், ஏன், இந்தப் பெண் வடிவத்திற்கு இவ்வளவு பெரிய மார்பகங்ள்? ஏன் சார், இந்த விக்ரகத்தில் இத்தனை தலைகள், இத்தனை கைகள்? எல்லாம் இயற்கைக்கு ஒத்ததாக இல்லையே, இவைகளைப் பார்த்துத் தானே, சூ, ஓ என்றெல்லாம் பிரமாதப்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். நல்ல வேளை, பெண்ணிற்கு இவ்வளவு விம்மிப் பெருத்த மார்பகங்கள் ஏன் என்று மட்டும் கேட்டார்களே, சூர்ப்பனகையுடன் சேர்ந்து கொண்டு, பெண்ணிற்கு மார்பகங்களே எதற்கு சார் என்று கேட்காமல் விட்டார்களே. அந்த மட்டுக்கும் கெட்டிக்காரர்கள்தான்!

91