பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நிக்கல், செம்பு, காரீயமும் வற்றாது பல ஆயிரம் ஆண்டுகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்திலுள்ள கோபால்ட் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே வரும். கடலுக்கடியில் உள்ளதோ 200 ஆயிரம் ஆண்டுகளுக்கு வரும்!

தவிரச் செங்கடலின் அடியில் கனிப்பொருள் செறிவுள்ள தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லா நிறங்களிலும் காணப்படுகின்றன. இவற்றில் பொன், வெள்ளி, துத்தநாகம், செம்பு இரும்பு, மாங்கனிஸ் முதலிய உலோகங்கள் அடங்கியுள்ளன. இப்படிவுகள் 7000 அடி ஆழத்தில் கிடைக்கின்றன.

செங்கடலிலுள்ள வடி நிலங்களில் (basin) பெரியவை 8 மைல் நீளமும், 4 மைல் அகலமும் உள்ளவை. இவற்றில் 50 அடி ஆழத்திற்கு நீர் உள்ளது. இந்நீரின் வெப்பநிலை 133°F. செங்கடல் நீரின் பொதுவான வெப்பநிலை 68°F. இங்குக் கடல் நீரின் உப்பளவு மற்றக் கடல்களைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம் உள்ளது.

செங்கடலில் உள்ள கனிபொருள் படுகைகளின் தடிமன் மட்டும் 300 அடி ஆகும், ஒரு பெரிய வடிநிலத்தில் மட்டும் 130 மில்லியன் டன் செம்பு, துத்தநாகம், வெள்ளி, தங்கம் முதலிய உலோகங்கள் உள்ளன. மேலும், அரபிக் கடலின் பாஸ்பேட் அளவு மற்றக் கடல்களைக் காட்டிலும 5 மடங்கு அதிகம் உள்ளது.