பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நேருவின் அறைகூவல்

இதுவரை நிகழ்ந்த போராட்டத்தில் நேபாவில் 4 காவல் நிலையங்களையும், லடாக்கில் 8 நிலையங்களையும் நம் படைகள் இழந்தன. கம்யூனிஸ்ட் சீனா கடும் போர் தொடங்கிய மூன்றாம் நாள் தான் இந்தியப் பிரதமமந்திரி திரு. ஜவாஹர்லால் நேரு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவுப்புச் செய்தார். அது வெறும் அறிவிப்பன்று, வீர முழக்கமேயாகும். சீனப் போரினால் திடுக்கிட்டுக் கோபத்தால் கொதிப்படையாத தேசபக்தர் எவரும் இருக்க மாட்டார். நாடே திடுக்கிட்டு எழுந்துவிட்டது. ஆயினும் நாடெங்கணும் பொங்கிப் பெருகிய உணர்ச்சி வெள்ளத்தை ஒன்று சேர்த்துத் தேசப் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதற்குப் பிரதம மந்திரியின் சொற்பொழிவு தக்க தூண்டுகோலாக அமைந்தது. ‘பாய் பாய்’ என்று கருதி வந்த சீனரை ‘வல்லமை மிகுந்த பழி பாவத்துக்கு அஞ்சாத பகைவர். நயவஞ்சகமான எதிரி’ என்று நேரு தம் வாயாலேயே கூறினர். ‘இந்தச் சண்டை நீண்டகாலம் நடக்கலாம். இதற்கு நாம் மனோ திடத்துடனும், மற்ற வகையிலும் தயாராக வேண்டும். நாம் நம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கையுடனும், ஆயத்தங்களுடனும் நாம் வெற்றி காண முடியும் என்பது உறுதி. முடிவு வேறு விதமாக இருக்க முடியாது. எதிரியிடமிருந்து நம் நாட்டை விடுவிப்போம் என்ற ஒரே சிந்தனையுடன் உறுதி கொள்ளவேண்டும்!’ என்று அவர் முழங்கினர். போர் நெருக்கடியினல் நாட்டின் அபிவிருத்திக்கான திட்டத்தைக் கைவிடுவதில்லை யென்றும், இதுவரை எந்த வல்லரசுக் கூட்டத்திலும் சேராமல் நடுநிலையில் இருந்தது போலவே இனியும் இருக்க வேண்டுமென்றும் அவர் தெளிவாகக் கூறினர்.

90