பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 புதிய நிலைமைகள்

இமயத்தின் வட சாரலில் திபேத்து நாடும், தென் சாரலில் மேற்கே காஷ்மீரும், நடுவில் நேப்பாளம், சிக்கிம், பூட்டான் ராஜ்யங்களும், கிழக்கே வடகிழக்கு எல்லேப்புறப் பிரதேசமும் இருக்கின்றன. இவையெல்லாம் முற்காலத்தைவிட இப்போது இந்திய சரித்திரத்தையும் உலக சரித்திரத்தையுமே பாதிக்கக் கூடிய முக்கியத்துவம் பெற்றுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் வட எல்லையைத் தாண்டிப் பகைவர்கள் உள்ளே வர முடியாதென்று எண்ணியிருந்தோம். இந்தியாவின் வடமேற்கில் மலைகளின் நடுவிலுள்ள கைபர் கணவாய் ஒன்றின் வழியாகவே ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகளிலிருந்து அந்நியர் நுழைய முடியுமென்று, ஆங்கில ஆட்சிக் காலத்தில் அது ஒன்றையே பாதுகாத்துவந்தனர். நிலப்பகுதியில் இந்தியப் பாதுகாப்பு என்றால், கைபர் கணவாயின் பாதுகாப்பு என்றிருந்தது. நம் நாட்டின் மேற்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கடல்கள் சூழ்ந்திருப்பதால், கடற்கரைகளைப் பாதுகாக்க ஆங்கிலேயர் தங்களுடைய திறமையுள்ள கடற்படையை நம்பியிருந்தனர். பர்மாவும், அதற்கும் தெற்கே மலாயும், சிங்கப்பூரும் அவர்களுடைய கைக்குள்ளிருந்தன. வடமேற்கில் ஆப்கானிஸ்தானுடன் போர் தொடுத்து, அதனுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தனர். எனவே சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இந்திய எல்லைகளுக்குள் எந்தப் பெரிய யுத்தமும் ஏற்படாமல் அமைதி நிலவியிருந்தது.

பாகிஸ்தான்

ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டு வெளியேறு கையில் நிலைமைகளெல்லாம் மாறிவிட்டன. மேற்

7