பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கொண்டு, துப்பாக்கிகளுடனும், பீரங்கிகளுடனும் வந்து, சீனக் கடற்கரையிலிருந்து குண்டுகள் பாய்ச்சும் வரை சீனர்கள் தங்கள் வேடிக்கையை மறக்காமலிருந்துவிட்டனர். கைத் தொழில்களிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். பட்டு உற்பத்தி, நெசவு, அழகிய பீங்கான் பொருள்கள் செய்தல், தந்த வேலைகள் முதலியவற்றில் அவர்கள் புகழ் பெற்றிருந்தார்கள். சித்திரங்களிலும், சிற்பத்திலும் அவர்கள் சிறந்து விளங்கினர்கள். கண் கண்டதைக் கை செய்யும் என்பது போலல்லாமல், கண்ணாலே கண்டதுடன் கற்பனைச் செறிவு சேர்த்துச் செய்வது அவர்கள் வழக்கம். சீனாவுக்குப் போகாமல், அவர்களுடைய வண்ணச் சித்திரங்களைப் பார்த்தே, அந்நாட்டின் கோடுகளையும், குளங்களையும், குன்றுகளையும், காடுகளையும், மலர்ச் செடிகளையும், மக்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

சீனமக்களிடையே கன்பூவியஸ் மதமும், லாவோத் ஸேயின் டாவோ மதமும், பெளத்த மதமும் பரவியிருந்தன. இவற்றுள் பெளத்தம் இந்தியாவிலிருந்து சென்று அங்கே நிலைத்து நின்ற சமயம். 2,000 ஆண்டுகட்கு முன்னர் பல பெளத்த பிட்சுக்கள் இமயமலைக் கணவாய்களின் வழியாகச் சென்று சாக்கிய முனிவரான புத்தருடைய தர்மத்தைச் சீனாவில் பிரசாரம் செய்தனர். அவர்கள் சீன மொழியைப் பயின்று பல நூல்களையும் எழுதி வைத்திருக்கின்றனர். சீனாவிலிருந்து இந்தியாவுக்கு யாத்திரை வந்து பெளத்த சமய நூல்களைப் பெற்றுச் சென்ற ஃபாஹி யான், இத்சிங், ஹ்யூன்த்ஸாங் முதலியோரும் அந்தச் சமயத்தின் வளர்ச்சிக்காக அருந்தொண்டு செய்தவர்கள் . மேலே கூறிய சமயங்களைச் சார்ந்த கோயில்கள் நாடு முழுதும் நிறைந்துள்ளன. ஆயினும் பெளத்த மடாலயங்களும், விகாரைகளுமே அதிகம். சீனாவில்

119