பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பல இடங்களில் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். முக்கியமாக லிங்கியாங் மாகாணத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகம். மேலைநாட்டுப் பாதிரிமார்களின் பிரசாரத்தினால் கிறிஸ்தவ மதமும் அங்குப் பரவியுள்ளது. சீன முடியரசைத் தொலைத்துக் குடியரசை நிறுவிய டாக்டர் ஸன்யாட்-லென் ஒரு கிறிஸ்தவர்; அவருக்குப் பின் குடியரசுக்குத் தலைமை தாங்கி, ஜப்பானியப் போரில் எதிர்த்து நின்று போராடிய சியாங் கை–ஷேக்கும் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்.

சீனாவில் எத்தனையோ போர்கள் நடந்துள்ளன. போர்களில் ஆயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் படைவீரர் மடிவதும் வழக்கந்தான். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த எல்லைகளைக் காப்பதற்காகப் போர்வீரர்கள் அடிக்கடி அணிவகுத்துச் செல்வார்கள். ஆயினும் பொதுவாக மக்கள் அமைதியாக ஒதுங்கி வாழவே விரும்பினர். சமூகத்தில் போர் வீரனைக் காட்டிலும் அறிவைப் பெருக்கும் அறிஞனுக்கும், உணவுப் பொருள்களைப் பெருக்கும் குடியானவனுக்குமே அதிக மரியாதையுண்டு. போரும், உதிரம் பெருக்கும் வெறியும் சீன இலக்கியங்களிலே அதிகமாக இடம் பெறவில்லை; எங்கணும் சாந்தி ‘சாந்தி, யென்று அமைதியே அதிகமாகப் பாராட்டப் பெற்றது. மக்கள் அதிகச் சமயப்பற்றும், மதவெறியும் கொண்டு விளங்கவில்லை எனினும், அவர்கள் நேர்மையையும் ஒழுக்கத்தையும் பேணி வந்தார்கள்.

தேசங்களில் சமூகத்தை ஒழுங்குபடுத்தி நடத்தி வர அரசாங்கங்கள் தேவையா இல்லையா என்பது பற்றி அறிஞர்கள் ஆராய்வது வழக்கம். ‘தற்காலத்திய ஆங்கில அறிவாளர் சிலர் அரசாங்கம் அவசியமான ஒரு தீமைதான் என்று கருதுகிறார்கள் ;ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, அரசாங்கம் தேவை

120