பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யும் நன்கு அறிந்தவர். அவர் உள்ளம் சீனக் கலைப் பண்பில் ஊறித் திளைத்திருந்தது. சிதைந்து சரிந்து விழுந்துகொண்டிருந்த பழைய சீனாவை அடித்தளமாகக் கொண்டு, ஒளி படைத்த புதிய சீனாவை நிறுவுவதற்காக அவர் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார். 1885-இல் பள்ளிப் பருவத்திலேயே, அவர் மன்னர் ஆட்சியைக் கவிழ்த்துக் குடியரசை அமைக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தார். உள் நாட்டு இரகசியச் சங்கங்கள் , வெளிநாடுகளில் வசித்து வந்த சீன மக்கள், பள்ளிகள், பத்திரிகைகள், பிரசாரகர்கள் மூலம் அவர் இடைவிடாமல் புரட்சிக்கு வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுடனும் அவருக்கு நேரிடையான அனுபவம் கிடைத்தது. 1895-இல் தென் சீன நகரான கான்டன் நகரில் முதன் முதலாகப் புரட்சிக் கலகம் தோன்றியது. அதிலிருந்து பதினாறு ஆண்டுகளில் ஸென் பத்துப் புரட்சிப் போராட்டங்களை நடத்தி வந்தார். இறுதியாக 1911, அக்டோபர் 10-ந் தேதி ஆசங் நகரில் பெரும் போராட்டம் தொடங்கிப் பல மாகாணங்களிலும் பரவிற்று. ஒரு மாதத்திற்குள்ளேயே பத்து மாகாணங்கள் மன்னர் ஆட்சியைத் துறந்து தங்கள் சுதந்தரத்தைப் பிரகடனப்படுத்தி விட்டன. நான்கிங் நகரில் டாக்டர் ஸென்னைத் தலைவராகக் கொண்ட புரட்சி சர்க்கார் அமைக்கப்பெற்றது. இதன் மூலம் 260 வருட காலமாக நடந்து வந்த மஞ்சூ வமிசத்தாரின் ஆட்சி முடிவுற்று, நாடு முழுதும் விடுதலையடைந்தது. நாட்டின் மாகாணங்கள் யாவும் சம உரிமை பெற்றன. 1912, ஜனவரி முதல் தேதியில் தேசத் தந்தை டாக்டர் ஸென் அரசாங்கத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு உறுதுணையா யிருந்துவந்த ‘டுங் மெங் ஹாயி’ என்ற இரகசியச் சங்கம் ‘கோமிண்டாங்’ கட்சியாக மாற்றி

124