பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


களின் மூலம் போர் வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்ப வேண்டியிருந்தது. வியக்கத் தகுந்த முறையில் அரசாங்கம் மிக விரைவிலே இப்பணியை நிறைவேற்றி வெற்றி கண்டது. மலைவாசிகள் தொடங்கிய காஷ்மீர்ச் சண்டை இந்தியா-பாகிஸ்தான் சண்டையாக நடைபெற்றது. பின்னர் ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு திறத்தாரும் எந்த எல்லையில் நின்று போரிட்டார்களோ அதே எல்லையில் அமைதியாக நின்று கொண்டனர். பாகிஸ்தானின் துருப்புக்கள் காஷ்மீரின் வடக்கி லும் மேற்கிலும் கைப்பற்றிய பகுதி “சுதந்தரக் காஷ்மீர்” என்ற பெயருடன் அவர்கள் வசமே இருந்தது. இது நாட்டின் மூன்றில் ஒருபகுதி இருக்கும். மற்றைப் பகுதி இந்தியாவின் வசமுள்ளது. போர்தான் நின்றதே ஒழிய, நிலையான சமாதானம் ஏற்படவில்லை. இரு பக்கத்துப் படைகளும் தத்தம் பகுதியைப் பாதுகாத்து நின்று வந்தன. போருக்குரிய ஆயத்தத்துடன் இரு படைவீரர்களும், ஆயுதங்கள், தளவாடங்களுடன், பதினெட்டு ஆண்டுகளாக எச்சரிக்கையுடன் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதனல் நம் நாட்டுக்கு அளவிடற்கரிய பொருள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதோடு, நம் தேவைக்கு ஏற்றபடி அங்குள்ள படையினரை வேறிடங்களுக்கு அழைத்துச் செல்லவும் இயலாதிருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதில், முதற்கண் காஷ்மீரைப் பெரிதும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

சென்ற 17 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்றுமுறை இந்தியாவுடன் போர் தொடுத்தது. கட்ச் போராட்டம் நீங்கலாக, மற்ற இரண்டு போர்களும் காஷ்மீரிலேயே நடந்தன. முதல் போராட்டம் மேலே கூறியதுபோல 1947-இல் நிகழ்ந்தது. இரண்டாவது போர் இந்த

11