பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 போலவே இயந்திரங்கள், உலோகங்கள் முதலியவைகளே இறக்குமதி செய்து வருகின்றது. தகரம், கம்பளி, தோல், தேயிலை, உயிருள்ள பன்றிகள் முதலியவைகளையே யுத்தத்திற்கு முன்னால் ரஷ்யா வாங்கி வந்தது. இப்பொழுது முன்னைவிட அதிகமாக அவைகளையும் வேறு பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம். ரஷ்ய வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதி அது சீனாவுடன் செய்து வரும் வாணிபம் என்று ஐக்கிய நாடுகளின் சபை கணக்கிட்டிருக்கிறது. ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருள்களில் கருவிகளும், இயந்திர சாதனங்களுமே அதிகம்.

ஸோவியத் ரஷ்யாவின் உதவியால் பெருந் தொழில்களை அமைத்துக்கொண்ட பின்பும், பாதுகாப்புக்குரிய செஞ்சேனையை அமைத்துக் கொண்ட பிறகும், சீனா முன்போல் ரஷ்ய உறவை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்குமா? சீன - ரஷ்ய உறவு இன்னும் பல்லாண்டுகள் நீடித்திருக்குமா ? சீன ரஷ்யாவுடன் நெருங்கி உறவாடுவதில் மற்றை உலக நாடுகளுக்கு நன்மையா, அல்லது அவைகளுக்குள் பிணக்கு ஏற்படுவதில் நன்மையா? இனியேனும் ரஷ்ய உதவி இல்லாமல் சீனா தனித்தியங்க முடியுமா ?

கொள்கை வேற்றுமை

சமீப காலத்தில் ஸோவியத் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கு மிடையே கொள்கை வேற்றுமை வளர்ந்து வருவதாகப் பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வந்தன. ஒரு சமயம் ரஷ்யத் தலைவர் குருஷ்சேவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்கி விளாசிப் பேசினர். உடனே சீனத் தலைவர் மாஸே-துங், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரமான நோக்கத்திலிருந்து விலகி விட்டது; கொள்கையில் பின்னேற்றம் ஏற்பட்டு

185