பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கைக் காரியாலயங்களும், சினிமா கொட்டகைகளும் நிறைந்திருக்கின்றன. சமீப காலம்வரை திபேத்தில் இவைகளில் எதுவும் கிடையாது. அங்கிருந்த இந்தியத் துாதுவர் காரியாலயத்தில் அமைந்திருந்த தந்தி நிலையம் மட்டும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டிருந்தது.

உலக மக்கள் யாவரும் நவநாகரிகச் சுழலில் சிக்கியிருக்கிறார்கள். எங்கும், எதிலும் வேகமாகப் போய்க்கொண்டே யிருக்கிறார்கள். தாம் நிற்கின்ற பூமியையோ, வானத்திலுள்ள தாரகைகளையோ பார்க்கக் கூட மக்களுக்கு நேரமில்லை. எல்லாம் ஒரே வேகம்தான். எல்லா நகரங்களிலும் ஒரே பேரொலிதான். இந்த வேகம், இரைச்சல் எதுவுமில்லாமல், திபேத்திய மக்கள் எதையும் மெதுவாகச் செய்துகொண்டு, ஆன்ம சிந்தனையிலே ஆழ்ந்திருந்தார்கள். சமயம்தான் அவர்களுடைய உயிர் நாடி. புத்த பகவானிடத்திலும் அவருடைய போதனைகளிலும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. அவர்கள் மதிநுட்பமுடையவர்கள், சகிப்புத் தன்மையுள்ளவர்கள், உல்லாசமாய்ப் பழகுபவர்கள். ஆனால் மூட நம்பிக்கையில் திளைப்பவர்கள். அவர்களுக்குள் கட்டுப்பாடு அதிகம். நாடெங்கும் பெளத்த மடங்கள் நிறைந்திருக்கின்றன. சிறந்த பெளத்தத் துறவிகளை அங்கு லாமாக்கள் என்று சொல்வார்கள். நாட்டு மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் லாமாக்கள்! பெண்களிலும் பல துறவிகள் இருந்தனர்.

தலாய் லாமா

லாமாக்களுக்கும் மக்களுக்கும் சமயத்தலைவராக விளங்குபவர் தலாய் லாமா. அவரே நாட்டுக்கும் அதிபதி. ஒவ்வொரு தலாய் லாமாவும் பகவான் புத்தரின் அவதாரமாகக் கருதப்பெறுகிறார். முதலாவது தலாய்

207