பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பார்க்கிலும் அதன் தலைநகரான எழில் மிகுந்த லாஸாவைப் பார்க்கவே வெளிநாட்டார்களுக்கு ஆவல் அதிகம். லாஸா ஒரு குன்றின் சாரலில் அமைந்த அணி நகரம். அதன் உச்சியில் அமைந்துள்ள தலாய் லாமாவின் மாரிக்கால அரண்மனையான பொட்டாலாவின் பொற்சிகரங்களை வெகு துாரத்திலிருந்தே கண்டு கொள்ளலாம்.

பொட்டாலா உலகத்திலேயே மிகப் பெரியனவாயுள்ள மாளிகைகளில் ஒன்று. அதன் மத்தியப் பகுதிக்கு மட்டுமே பதின்மூன்று மாடிகள் இருக்கின்றன. 1,300 ஆண்டுகளுக்கு முன் ஒரு திபேத்திய மன்னர் அதைக் கட்ட ஆரம்பித்ததாகச் சரித்திரம். அதைத் தேவதைகளே கட்டி முடித்ததாக மக்கள் நம்புகின்றனர். பின்னால் ஒவ்வொரு தலாய் லாமாவும் பழைய கட்டடத்துடன் புதிது புதிதாக மாளிகைகள் கட்டிச் சேர்த்திருக்கின்றனர். பொட்டாலாவில் துறவிகள் தங்கும் மடங்களும், பிரார்த்தனைக் கூடங்களும், துறவிகள் பள்ளியும், தங்கத் தகடுகளால் மூடப்பெற்ற பழைய தலாய் லாமாக்களின் சமாதிகளும், ஆலயங்களும், மந்திரி சபை, இராஜ்ய சபை கூடும் பெரிய மண்டபங் களும், மற்றும் அரசாங்க அலுவலகங்களும் அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவி லிருந்து வரவழைத்த பனை ஒலைகளில் எழுதப்பெற்ற ஏடுகள் ஆயிரக்கணக்கில் அங்கே பாதுகாத்து வைக்கப் பெற்றிருக்கின்றன. சீனச் சக்கரவர்த்திகளும், மங் கோலியச் சக்கரவர்த்திகளும் முந்திய தலாய் லாமாக்களுக்கு அளித்த காணிக்கைகளும், மற்றும் பொன்னும், வெள்ளியும், இரத்தினங்களும், பொக்கிஷங்களும் அங்கே குவிந்து கிடக்கின்றன. பழங்காலத்துத் திபேத்திய ஆயுதங்கள், கவசங்கள், கேடயங்களை யெல்லாம் அங்கேதான் காணமுடியும்.

215