பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 மக்களின் பக்தி எல்லையற்று விளங்கும். ஆண்கள், பெண்கள் எல்லோருமே வணங்கிய தலைகளுடன் சிலைகளாகச் சமைந்து விட்டார்களோ என்று எண்ணும்படி தலாய் லாமாவை வணங்குவது வழக்கம்.

லாஸாவில் ஆண்டு முழுதும் புத்தாண்டுத் திருவிழா, தண்ணீர்த் திருவிழா, குளிக்கும் விழா, காற்றாடி விழா முதலிய திருவிழாக்களும் விருந்துகளும் நடைபெறுவது வழக்கம். வசந்தம், மாரிக்காலம் எப்பொழுதும் திருவிழாக்கள் உண்டு. இலையுதிர்காலம் தொடங்கியவுடன் காற்றாடி விடும் திருவிழா ஒரு மாதம் நடைபெறும். குழந்தைகள் மட்டுமின்றி, வயது வந்த ஆடவர், பெண்டிர்களும் பல வண்ணங்களில் காகிதப் பட்டங்கள் செய்து, மாடிகளில் நின்று கொண்டு அவற்றைப் பறக்கவிடுவார்கள். மாத இறுதியில் விழா முடிந்தது என்று அறிவிக்கப் பெற்றதும், காற்றாடிகள் போகும் இடம் தெரியாமல் எல்லாம் மறைந்து விடும்.

விழாக்களில் புத்தாண்டுத் திருவிழாவே மிக முக்கியமானது. வழக்கமாக அது மார்ச் மாத முதல் வாரத்தில் வரும். திருவிழாக் காலம் மூன்று வாரம் முழுதும் லாஸா நகரில் திபேத்தியரோடு லடாக்கியர், பூட்டானியர், மங்கோலியர், சிக்கிம் மக்கள் முதலிய ஜனங்களின் கூட்டத்தை அளவிடல் அரிது. அக்காலத்தில் ஒரு நாள் பொட்டாலா அரண்மனைக்குள்ளே புனிதத் தலாய் லாமா மக்களுக்குத் தரிசனம் அளிப்பது வழக்கம். ஜனங்கள் மிகுந்த பக்தியுடன் சென்று பட்டுப் பீதாம்பரங்களால் அலங்கரித்த அரியாசனத்தில் அமர்ந்துள்ள தலாய் லாமாவைத் தரிசித்து வணங்கித் தத்தம் காணிக்கைகளைச் செலுத்துவார்கள். அச்சமயத்தில் அரியணை அருகில் காணிக்கைப் பொருள்களான பணப்பைகளும், பட்டுச்சுருள்களும்,

217