பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளைச் சால்வைகளும் மலை மலையாகக் குவிந்திருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

புத்தாண்டுத் திருவிழாவில் தலைநகருக்கு வந்திருக்கும் எல்லா லாமாக்களும் அரசாங்க விருந்தினராகவே இருப்பார்கள். அவர்களுக்காகச் செலவாகும் தேயிலை மூன்று டன், வெண்ணெய் ஐம்பது டன், கைச்செலவுக்காகக் கொடுக்கும் பணம் 40, 000 பவுன் என்று ஒருவர் கணக்கெடுத்துள்ளார். பொதுவாகவே எல்லா மடாலயங்களுக்கும் நிலங்களும் சொத்துக்களும் இருந்த போதிலும், தலாய் லாமாவின் சர்க்காரும் ஆண்டு தோறும் பற்றாக்குறைகளை ஈடு செய்யப் பணமளிப்பதுண்டு.

லாஸாவில் நேப்பாளியர்களும், சீனர்களும் இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரம் செய்து நல்ல செழிப்பான நிலையிலிருப்பவர்கள். இந்தியாவிலிருந்து முற்காலத்தில் அங்கே சென்ற முஸ்லிம்கள் பலரும் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் தொழுகைக்காகத் தனிப் பள்ளியும் இருக்கின்றது.

லாஸாவிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் திரேபங் என்ற மாபெரும் மடாலயம் இருக்கின்றது. அங்கு மட்டுமே 10,000 துறவிகள் வசிக்கிறார்கள். திபேத்திய மடாலயங்களில் இதுவும், ஸேரா மடமுமே முதன்மையானவை.

திபேத்து - சீன உறவு

2,000 ஆண்டுகளுக்கு முன்பு திபேத்தில் முடியாட்சி ஏற்பட்டிருந்தது. நிய-திரி-லென்போ என்பவரே முதல் மன்னர். அவருக்குப்பின் நாற்பது தலைமுறைகளாக அரசர்கள் நாட்டை ஆண்டுவந்தனர். இருபத்தெட்டாவது மன்னர் காலத்தில் புத்தர் பெருமானின் அறவுரைகள் அடங்கிய திரிபிடக நூல்கள்

218