பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இந்தியாவிலிருந்து அங்கு முதன் முதலாக எடுத்துச் செல்லப்பட்டன. அது முதல்தான் பெளத்த தர்மம் அங்குப் பிரசாரம் செய்யப்பெற்றது. பிற்காலத்தில் பெளத்த நூல்கள் வடமொழியிலிருந்து திபேத்திய மொழியில் ஏராளமாகப் பெயர்த்தெழுதப் பெற்று நாடெங்கும் பரவிவிட்டன. கி. பி. 1642-இல் சமயத் தலைவரே நாட்டிற்கும் அதிபதியாயிருக்கும் முறை ஏற்பட்டது. அது முதல் தலாய் லாமாக்களின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சீனச் சக்கரவர்த்திகள் தலாய் லாமாக்களைத் தங்கள் சமயாசாரியராகப் போற்றி வந்ததுடன், அரசியல் விஷயங்களில் அவர்களுக்கு உதவியாக ‘அம்பான்கள்’ என்று அழைக்கப்பெற்ற தங்கள் பிரதிநிதிகள் இருவரைத் திபேத்தின் தலைநகருக்கு அனுப்பிவைப்பதும் வழக்கமாயிருந்தது.

33 ஆவது தலாய் லாமாவின் காலத்தில்தான் திபேத்து வெளிநாடுகளுடன் சிறிது தொடர்புகொள்ளத் தொடங்கிற்று. சில உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்பட்டன. படிப்புக்காகச் சில மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பெற்றனர். அப்பொழுதிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், திபேத்துடன் வியாபாரம் செய்வதற்காக நேராக அதனுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல், சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. திபேத்திய அரசாங்கம் இதை மதிக்கவேயில்லை. கர்ஸான் பிரபு இந்தியாவில் பிரிட்டிஷ் அரசப்பிரதிநிதியாயிருந்த சமயம் பிரிட்டிஷ் படை ஒன்று லாஸாவுக்குச் சென்று போரிட்டுத் திபேத்தியப் படையை வெற்றிகொண்டது. தலாய் லாமா கீழ்த் திசையை நோக்கி ஓடிவிட்டார். 1904-இல் பிரிட்டிஷார் திபேத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின், அவர்கள் படையும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது.

219