பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 இயலாது. அப்படி வதை செய்வதற்கும் இரக்கமற்ற சீனருக்கு நிகராக வேறு நாட்டார் இருப்பது அரிது.

நாடு முழுதும் இலட்சக்கணக்கான சீனப் படைவீரர்கள் வந்து குவிந்தனர். பத்து லட்சத்திற்கு மேற்பட்ட சீனக் குடியானவர்களும் உழைப்பாளிகளும் வந்து சேர்ந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்பு ஜனத் தொகையில் சீனர்களே பெரும்பான்மையினராகவும், திபேத்தியர் சிறுபான்மையினராகவும் மாறிவிடும்படி செய்வதற்குரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. முதலில் திபேத்தியரின் பெளத்த சமயத்தை ஒழித்துக் கட்டுவதற்கு மடங்களைத் தகர்த்தெறிய வேண்டும்; பெளத்தத் துறவிகளை அழிக்க வேண்டும்; சமய வாடையே யில்லாது நாத்திகம் நிறைந்த சூழ் நிலையில் வளர்வதற்காக ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் சிறுவர்களையும் சீனாவுக்கே கொண்டுபோய் விடவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச் சீனர் உறுதியுடன் வேலை செய்து வந்தனர்.

சீனப் படையினர் இடையிடையே அயர்ந்து விடாமல் ஊக்கப்படுத்தப்பட்டனர். திபேத்தை அடக்கி ஒடுக்கிய பிறகு, சிக்கிம், நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளை விடுதலை செய்ய வேண்டும் ! அதன்பின் மாபெரும் உபகண்டமாகிய இந்தியாவையும் ‘விடுதலை’ செய்ய வேண்டும் ! படைவீரர்களுக்கு இவ்வாறு அடிக்கடி உபதேசிக்கப்பட்டது. நாடுகளின்மீது காரணமில்லாமல் அக்கிரமமாகச் சீன படையெடுத்து ஆக்கிரமிப்புச் செய்வதற்குப் பெயர்தான் விடுதலை செய்தல் ! மேற்கூறிய நாடுகளெல்லாம் மேலைநாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் கையில் சிக்கியிருப்பதாயும், அவைகளே விடுதலை செய்து காப்பாற்றுவது சீனப் படைகளின் கடமை என்றும் சீன அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. கம்யூனிஸ்ட் சீனாவின் செஞ்சேனைக்கு

235