பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/252

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 யான வலிமை யென்ற கருத்தும் நிலவியுள்ள போதிலும், இறுதியில் திபேத்துக்கு நியாயம் கிடைக்கும் என்றே அவர் நம்புகிறார். உலக மக்கட் சமுதாயத்தின் உள்ளத்திலே உண்மைக்கும் நீதிக்கும் இன்னும் மதிப்பிருப்பதால், ஒரு நாள் சத்தியமே வெல்லும், பாவம் தோற்றே தீரும் என்றும் அவர் நம்புகிறார். திபேத்திய மக்களின் தீரத்திலும் அவருக்கு முழு நம்பிக்கை யிருக்கின்றது.

திபேத்து கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அடிமையாகிவிட்டது. நாட்டில் முக்கியமான இடங்களிலெல்லாம் சீனர் இராணுவ முகாம்களை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் ஏராளமான விமான தளங்களை அமைத்துள்ளனர். இலட்சக்கணக்கான போர் வீரர்கள் திபேத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றனர். ஆயுதங்களும், விமானங்களும் ஆயத்தமாக உள்ளன. பட்டாளங்கள் போய் வருவதற்கு வசதியாகச் சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. திபேத்தின் எல்லைப்புறங்களில் சீனப் படைகள் குவிக்கப் பெற்றுள்ளன. அத்துடன் இந்தியப் பிரதேசங்களிலும் அவைகள் புகுந்து பல பிரதேசங்களை வசப்படுத்திக் கொண்டிருக்கும் வரலாறுகள் முன்னரே கூறப்பட்டுள்ளன.

ஆபத்து வேளையில் இந்தியா திபேத்துக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாமற் போய்விட்டது. இதைப் பற்றித் திபேத்தியருக்கு அளவற்ற வருத்தமுண்டு : பின்னால் வருத்தம் துவேஷமாகவும் முற்றிவிட்டது. உலக நாடுகளில் எதுவும் திபேத்துக்கு உதவ முன்வரவில்லை. திபேத்தைப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பது மட்டும் சீனாவின் நோக்கமன்று. இந்தியா உள்படத் தெற்கு ஆசிய நாடுகளே அவர்கள் தாக்குவதற்கும் அதுவே தக்க தளமாக விளங்குகின்றது.

242