பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 தலாய் லாமாவின் பிரதிநிதிகளை அழைத்துச் சீனர்கள் பீகிங்கில் கட்டாயப்படுத்திக் கையெழுத்து வாங்கினார்கள். முதலில் மிரட்டிப் பார்த்தார்கள்: பிறகு படையெடுத்துத் திபேத்து நாட்டையே கைப்பற்றிக் கொண்டார்கள். எதிர்த்து நின்ற சிறு படையை மடக்கியடித்து லட்சக்கணக்கான மக்களையும் வதைத்து விட்டார்கள். நாடு முழுதும் பல்லாயிரம் சீனத் துருப்புக்கள் புகுந்து பரவியிருக்கின்றன. திபேத்திய மக்களையே அடிமைகளாக வேலை வாங்கி, ஏராளமான சாலைகளும், படை வீடுகளும், விமான தளங்களும் அமைக்கப்படுகின்றன. திபேத்தின் தலைநகரான லாஸாவிலிருந்து சீனாவின் தலைநகரான பீகிங்வரை 1,500 மைல் நீளத்திற்கு ரயில் பாதையும் அமைக்கப் பெற்று வருகிறது. திபேத்திலிருந்துதான் சீனப் படையினர் இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.

திபேத்து பிரிட்டனைவிட ஏழு மடங்கு பெரிது. 4, 69, 294 சதுர மைல் பரப்புள்ளது. சுமார் 15 லட்சம் மக்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜனத்தொகைக் கணக்கே இனிமேல்தான் எடுக்க வேண்டும். இவ்வளவு பெரிதான நம் அண்டை நாட்டைச் சீனா, பாம்பு தவளையை விழுங்குவது போல் விழுங்கிவிட்டதை நாம் தடுத்து நிறுத்தவில்லை. அப்போதிருந்த நிலையில் வல்லரசுகளும் வழிமறிக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் சபையும் அவலமாக அயர்ந்திருந்துவிட்டது. அதனால், பாஞ்சாலி கெளரவர்கள் சபை நடுவில் துகிலுரியப்பட்டது போல், திபேத்து கம்யூனிஸ்ட் சீனரின் கைப்பிடியில் சிக்கிப் படாதபாடு படுகின்றது.

47

47