பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கின்றனர். இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி வல்லமையுள்ளது. ஜாவா தீவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகப் பேசுவதற்குக்கூட மக்களுக்கு அச்சம். அப்படிப் பேசிய தலைவர்களுடைய வீடுகள் தீயில் வெந்து சாம்பலாகின்றன. 1950-இலிருந்து இந்தோனீஷியாவில் அமைந்துள்ள குடியரசும் நன்கு இயங்கி வரவில்லை. எங்கும் லஞ்ச ஊழல் மிகுதி; அடிக்கடி புரட்சியும் நடக்கும்.

உலகிலேயே அதிக அளவு ரப்பர் இந்தோனீஷியாவில்தான் கிடைக்கின்றது. ஏராளமான நெல் வயல்களும் நிறைந்துள்ளன. தேக்கு மரங்களும், சந்தன மரங்களும், தென்னை, கொயினா மரங்களும் இங்கே அதிகம். பெட்ரோல் எண்ணெயும், வெள்ளியமும் பூமியிலிருந்து கிடைக்கின்றன. இத்தனை இயற்கைச் செல்வங்கள் நிறைந்திருப்பினும், இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். 8 கோடி மக்களுள்ள இந்நாட்டில் கம்யூனிஸ்ட் சீனா கண் வைத்துத் தனக்கு அடிபணிந்து நிற்கும்படி செய்திருக்கின்றது.

பஞ்சசீலம் பட்ட பாடு

திபேத்து சம்பந்தமாக இந்தியா சீனாவுடன் 1954, ஏப்ரல் 29-ந்தேதி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. திபேத்துடன் வர்த்தகம் செய்வதற்கும், தொடர்பு வைத்துக் கொள்வதற்கும், திருக்கயிலாயம் முதலிய தலங்களுக்கு யாத்திரை செல்வோர் திபேத்தின் வழியாகச் சென்று வருவதற்கும் அந்த ஒப்பந்தம் வழி வகுத்தது. ஆங்கில ஆட்சிக் காலத்தில் திபேத்தில் தனக்குக் கிடைத்திருந்த விசேட ராஜாங்க உரிமைகளை யெல்லாம் இந்தியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தது. திபேத்து சீனாவுக்கு உட்பட்ட சுயாட்சியுள்ள பிரதேசம் என்பதையும் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில்

50