பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 சீனாவும் இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து கொள்கைகள் குறிக்கப் பெற்றிருந்தன. அவையே“பஞ்ச சீலங்கள்” [1] என்று உலகம் முழுதும் விளம்பரப்படுத்தப் பெற்றவை. இரு நாடுகளில் ஒவ்வொன்றும் மற்றதன் தேச எல்லைகளையும், முழு ஆதிபத்திய அந்தஸ்தையும் மதித்தல் முதல் கொள்கை. இரண்டாவது பரஸ்பர அனாக்கிரமிப்பு. மூன்றாவது ஒன்று மற்றதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை. நான்காவது இரு நாடுகளின் சமத்துவமும், பரஸ்பர உதவியும். ஐந்தாவது இரு நாடுகளும் சமாதானமாகச் சக வாழ்வு வாழ்தல். இவ்வாறு ஏற்பட்ட ஒப்பந்தம் எட்டு ஆண்டுகள் நீடித்திருக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப் பெற்றது.

மேலே கூறிய பஞ்ச சீலங்களையும் சீனா கிழித்துக் காற்றில் பறக்க விட்டுவிட்டது.

முதலாவது : இந்தியாவின் வட எல்லைகளைத் தாண்டிச் சீனா ஆயுதம் தாங்கிய சிறு படைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தது. இந்தியாவின் பிரதேச கெளரவத்தை மதிக்காமல், நமது காஷ்மீர் இராஜ்யத்தின் தென் பக்கம் லடாக் பகுதியில் 12,000 சதுர மைல் பரப்புள்ள நிலங்களை மெல்ல மெல்ல அபகரித்துக்கொண்டது; மொத்தம் ஐம்பதாயிரம் சதுர மைல் அளவுள்ள இந்தியாவுக்குச் சொந்தமான பூமியை அது தன்னுடையது என்று தகராறு செய்து வரு கின்றது.


  1. ‘பஞ்ச சீலங்கள்’ என்று 2,000 ஆண்டுகட்கு முன்பக வான் புத்தர் உபதேசித்த ஐந்து ஒழுக்கங்களை இவை நினைவுறுத்துகின்றன. கொல்லாமை, திருடாமை, முறையற்ற சிற்றின்பம் விலக்கல், பொய்யாமை, வெறியூட்டும் பொருள்களை விலக்கல் ஆகியவையே அந்தப் பஞ்ச சீலங்கள்.
51