பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 பிரசாரமும் செய்துவந்தனர். சீனப் படையினர் அந்த மலைப் பிரதேசங்களிலும் காடுகளிலும், கடுங்குளிரிலும், பனியிலும் தங்கியிருந்து பழக்கமும் பெற்றுக் கொண்டனர். 1959-லிருந்து நம் காவல் நிலையங்களைச் சேர்ந்த ஜவான்களோடு அடிக்கடி பொருதி, அவர்களுடைய நிலையையும், இந்திய அரசாங்கத்தின் மனப்பான்மையையும் நன்கு புரிந்து கொண்டனர்.

1959, அக்டோபர் 21-ஆம் நாளிலேயே சீன 16, 000 அடி உயரமுள்ள கோங்கா கணவாயில் போர் முரசு கொட்டியது. இந்திய எல்லைக் காவற்படையினரில் ஒன்பது வீரர்களின் தலைகளைக் குண்டுகளால் தகர்த்தெறிந்துவிட்டு, அவர்களுடைய உடல்களே மட்டும் சீனப்படையினர் நமக்குப் பரிசுகளாகத் திரும்பக் கொடுத்தனர்! சீனப்படையினர் என்ன அக்கிரமம் செய்தாலும், என்ன தீங்கிழைத்தாலும், புது டில்லியிலிருந்து சீன அரசாங்கத்திற்குக் கண்டனக் கடிதங்கள் சென்றுகொண்டேயிருந்தன. ஆணவம் நிறைந்த சீன அஞ்சல்கள் மறுமொழிகளாக வந்துகொண்டேயிருந்தன. சொற்போரை விட்டுவிட்டு, சீன அரசாங்கம் நேரடியாகப் பாரத நாட்டின் மீது படையெடுக்கவே தீர்மானித்துவிட்டது.

முதல் தாக்குதல்

1962, அக்டோபர் 20-ஆம் தேதி சனிக்கிழமை. நாடெங்கும் தீபாவளி கொண்டாடுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, காலை 5 மணிக்கு, நேபாவிலும் லடாக்கிலும் ஒரே சமயத்தில் சீனப் படைகள் தாக்கத் தொடங்கின. நேபாவின் மேற்குக் கோடியில், பூட்டான், திபேத்துப் பிரதேசங்களின் எல்லையிலுள்ள டோலா, கின்ஸிமானே, தக்லா மலைச்சாரல் பகுதிகளில் சீனப்படைகள் அணி அணியாகச் சென்று தாக்

86