பக்கம்:இந்தியா எங்கே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

"தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகினில் அரசரெல்லாம்!
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயர்வார்!
நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்."

என்று, அன்று மகாகவிப் பாரதியார், நமது கோழைத்தனத்தைப் பார்த்துப் பரிதாபத்துடன் பாடினார். விடுதலை வந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த பயம் போகவில்லை, அரசாள வந்தவர்களைப் பேய் என்று எண்ணி, அஞ்சி நடுங்கும் அடிமைப்புத்தி நம்மை விட்டுப் போகவில்லை. இந்த வீண்பயம் போனால் தான், நான் உண்மையான விடுதலை பெற்றவர்களாவோம். இதை மனதில் எண்ணித்தான் நமது அருமை ஜனாதிபதி மாட்மிமிகு. நீலம் சஞ்சீவி ரெட்டி, குடியரசு தினச் செய்தியில் சில வீரமிக்கக் கருத்துகளைப் பேசியிருக்கிறார்.

1. வரும் தேர்தலில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? அவர்களது ஊழியர்களையா? அல்லது எஜமானர்களையா? .

2. பெரும்பான்மை மக்கள் ஒன்றுபட்டு, தங்களுக்கென ஒரு அமைப்பை அமைத்துக் கொண்டு, குரல் எழுப்பாததால், அவர்களது நியாயமான தேவைகளைப் பற்றி அலட்சியமாக இருக்கலாமா?

என்று ஜனாதிபதி கேட்டுள்ள கேள்விகளுக்கு அர்த்தம் என்ன? நமது மக்கள் அச்சமற்ற சுதந்திர உள்ளத்தோடு அரசியலின் கண்ணோட்டத்தைக் கொண்டு துணிந்து வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்க வேண்டும் என்பதுதான் அவர் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/5&oldid=982902" இலிருந்து மீள்விக்கப்பட்டது