பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
பாரதிதாசன்

பிரெஞ்சு ஆசிரியர்கள் கட்சிக்கு வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் தலைவர். அவர் புதுச்சேரி தலைமைப் பள்ளியின் முதல்வர்; தமிழாசிரியர்கள் கட்சிக்குச் சுப்புரத்தினம் தலைவர். சமயம் வரும்போது ஒருவரையொருவர் காலை வாரிவிடுவது இவர்களுக்குள் வழக்கம்.

ழுய்ல் ஃபெரி (Jules Fery) என்பவர் 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்த பெரிய சமுதாய சீர்திருத்தவாதி. கல்வித்துறை சமயவாதிகளின் கையில் இருந்ததை அவர் கண்டித்தார்.

"பாதிரிமார் கையில் கல்விக்கூடங்கள் இருப்பதால் ஏழை எளியவருக்குக் கல்வி எட்டவில்லை. கல்வியை எல்லாரும் பெறாவிட்டால் ஏழை ஏழையாகவும், பணக்காரன் பணக்காரனாகவுமே இருக்க நேரிடும். கல்விக் கூடங்களைப் பாதிரிமாரிடமிருந்து பிடுங்கி அரசாங்கமே ஏற்று நடத்தினால் குடியரசின் முழுப் பயனை நாட்டு மக்கள் எல்லாரும் நுகர முடியும்" என்று அவர் பிரசாரம் செய்தார். பிரெஞ்சுப் பாதிரிமார்கள் தமக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ழுய்ல் ஃபெரியை நாடு கடத்தி விட்டனர். ழுய்ல் ஃபெரி வெளிநாட்டில் இருந்து கொண்டே தம் பிரசாரத்தை ஓய்வின்றிச் செய்து வந்தார்.

பின்னர் நாட்டுத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்ட போது முய்ல் ஃபெரி கல்வியைச் சமய ஆதிக்கத்திலிருந்து மீட்டு அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வந்தார். அன்று முதல் பிரெஞ்சு நாடு முய்ல் ஃபெரியைக் கல்விச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றுவது வழக்கம். ழுய்ல் ஃபெரியின் நூற்றாண்டு விழா வந்தது. அவ்விழா பிரெஞ்சு நாடு மட்டுமன்றிப் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

புதுவையிலும் அவ்விழா எல்லாப்பள்ளிகளிலும் கல்வித்துறைத் தலைவர் (சீஃப்) முன்னிலையில் கொண்டாடப்பட்டது. அவ் விழாவின் போது ஆடல், பாடல், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முய்ல் ஃபெரியைப் பற்றிச் சுப்புரத்தினம் எழுதிய பாடல் ஒன்றை மாணவர்கள் பாடினர். அப்பாடலைப் பாடத்தொடங்குவதற்கு முன்பே இது மதத் துரோகமான பாட்டு, இதைப் பாடினால் கூடியிருப்போர் உள்ளம் புண்படும் என்று கல்வித்துறைத் தலைவரிடம் கிருஷ்ணசாமி நாயுடுவின் ஆட்கள் கோள் மூட்டினர். ஆனால் தலைவர்