பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 மனித நேயர் "மானிடம் என்றொரு வாளும் - அதை வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் - இதில் வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும். பாரதிதாசன் தொடாத பொருளில்லை; அவர் தொட்டுப் பொன்னாகாதது எதுவுமில்லை. அவர் வாழ்க்கை பலபடிகளையும், பக்குவங்களையும் கொண்டது. ஆத்திகர், நாத்திகர், தேசியவாதி, பகுத்தறிவுவாதி, சீர்திருத்தவாதி, மனிதநேயர் என்ற பல படிகளைக் கடந்து வந்தவர். ஒவ்வொரு நிலையிலும் அவருள்ளத்தில் முகிழ்த்து எழுந்த கருத்துக்களைத் தமது கவிதைகளில் நிரல்படத் தொகுத்து முத்துக்களாக வரிசைப்படுத்தியுள்ளார். வாழ்க்கையில் எந்த நிலையிலும் அவர் மனிதநேயத்துக்கு மாறாகப் பேசியதில்லை. அவர் வீரத்தை பற்றிப் பாடினார். ஆனால் போரையும் போர்க் கொடுமைகளையும் வெறுத்தார். மனிதர்களின் மடமையையும் அறியாமையையும் கடுமையாகச் சாடினார். ஆனால் மனிதநேயம் அவர் நூல்களில் எங்கும் பேசப்படுகிறது. உலக ஒற்றுமை என்ற பாடலில் மாந்தன் உள்ளம் எப்படி விரிவடைய வேண்டும் என்பதைப் படிப்படியாக விளக்கிச் செல்கிறார். 'தன் பெண்டு பிள்ளைகளை மட்டும் நேசிப்பவன் உள்ளம் கடுகுபோல் சிறியது; தன் ஊரை மட்டும் நேசிப்பவன் உள்ளம் துவரை போன்றது. தனது நாட்டை மட்டும் நேசிப்பவன் உள்ளம் தொன்னை போன்றது. ஆயுதங்களை ஒதுக்கித் தீவிரவாதத்தை வெறுத்துத் தன் நாட்டில் வாய்த் திறத்தாலும் கைத்திறத்தாலும் அமைதியை நிலைநாட்டுபவர் உள்ளம் மாம்பிஞ்சு போன்றது. ஆனால் தாயுள்ளம் என்ற உயர்ந்த உள்ளம் ஒன்று உண்டு' என்று கூறி அதைக் கீழ்க் கண்டவாறு விளக்குகிறார் கவிஞர்: