பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


12 விந்தன் அனைத்திந்திய அளவில் அச்சகங்கள் நிறைந்த மாநிலம் நம் தமிழகம்தான் என்றாலும், அதர்மங்களுக்குக் குறைவில்லாத மாநிலமும் நம் தமிழகமதான் அன்று ஒரு 'காலிக்கு ஆறணா வாங்கிய தொழிலாளி இன்று அன்றாடக் கூலியாக ஆறு ரூபாய் பெறுகிறான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அச்சகங்களில் பீஸ்ரேட் காண்ட்ராக்ட் முறையே பிரதானமாக இருந்தது. இன்றும் அந்த சுரண்டல் முறை நீங்கவில்லை என்பதைவிட நிலைத்து வேரோடிக் கொண்டிருக்கிறது என்பதே வேதனைக்குரியது. "பீஸ்ரேட் காண்ட்ராக்ட் போன்ற அவலங்களுக்கு ஆளாகி அன்றாடக் கூலியாக ஆறணா பெற்றவர்தான் அறிவு ஜீவியான கோவிந்தன். தினமும் காலையில் சேர்ந்தே வேலைக்குப்போகும் கோவிந்தனும், இராஜாபாதரும் மாலையிலும் சேர்ந்தே வீடு திரும்புவார்கள். ஒரே மாற்றம் இருவர் கையிலும் காலையில் சோத்து மூட்டை இருக்கும். மாலையில் ஆறணா அவர்கள் பாக்கெட்டில் கனக்கும். புளியந்தோப்பிலிருந்த தங்கசாலை தெருவிற்கும் தங்கசாலை தெருவில் இருந்து புளியந்தோப்புக்கும் நடந்தே பழகியவர் நண்பர்கள், காலையில் கண்ணை மூடிக்கொண்டு வேலைக்குப் போவார்கள். மாலையில் நடந்து வருவது நண்பர்களுக்கு சுகானுபவமாகவும் சுய சிந்திப்புக்கு ஏற்றதாகவும் இருந்தது. விந்தனுக்கு எழுத்து நடைவேகமானது என்றாலும் அவர் சொந்த நடை நிதானமானது. எதையும் நிதர்சனமாக நின்று கவனிக்கக் கூடியது. இந்தக் கவனிப்புடன் சாலையில் வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களை, போலீஸ்காரன் மிரட்டலுக்கு பயந்து முந்தானையில் உள்ள காசையெல்லாம் அவனுக்கு அவிழத்துக் கொடுத்துவிட்டு தேற்றுவார் யார்? என்று தெருவில் தேம்பி அழும் கூடைக்காரியை, சகலவிதமான இறைச்சிகளுடன் சோத்துக்கடை நடத்தும் நடைபாதை ஒட்டல்களைக் கவனிக்கத் தவறியதில்லை. காட்சிகள் கண்ணால் கண்டவர் அதற்கான காரணங்களை அறிய ஆவல் கொண்டபோதிலும் அவர்களோடு பேசக் கூச்சப்பட்டு நண்பன் உதவியோடு அவர்களுடன் பேசுவார். சில தினங்களில் பசியைப் போக்க நண்பர்கள் இருவரும் நடைபாதை ஒட்டலில் கையேந்தி சோறு வாங்கித் தின்ற அனுபவமும் உண்டு. கோவிந்தனுக்கும் அச்சுத் தொழில் அறிவுபூர்வமான தொழிலாக இருந்தாலும் அதில் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமான வருவாய் கிடைக்காததால், தமிழரசு’ அச்சகத்திலிருந்து ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம் போன்ற அச்சகங்களுக்கு மாறி அனுபவமிக்க கம்பாசிட்டராக ஆனந்த விகடன் அச்சகத்தில் சேர்ந்தார்.