பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

சாத்திர நூல்களையும் எழுதியுள்ளார் என்பது முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சிவஞானபோதமும் சிவஞானமுனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்’ என்னும் அரியதொரு நூல், 1953 ஆம் ஆண்டில் வெளி வந்தது. முனிவரது நடை, கடினமானது; இலக்கணச் செறிவுடையது; வடமொழிக் கருத்தும் கொண்டது. இந்த நூலினைப் படிப்பதற்கே சைவப் பெருமக்கள் அஞ்சுவர். அத்தகைய நூலுக்குச் செம்பாகமான குறிப்புரை தந்த பெருமை உரைவேந்தருக்கு உரியது.

இந்நூல் முன்னுரையில் ‘சைவநெறி’ பற்றி அரிய விளக்கம் தருகின்றார் உரைவேந்தர்:

“சிவாகம நெறி பற்றித் தெளிவுபெற்றோர் மேற் கொண்ட ஆகமநெறி ‘சைவ நெறி’ என்றும்; வேத வேதாந்தங்களுக்குத் தம் கலைப்புலமையே துணையாகக் கொண்டு காட்டினோர் காட்டிய வற்றை மேற்கொண்டோரது நெறி ‘வைதிக நெறி’ என்றும் இருவகை நெறிகள் இயலுவவாயின. இவற்றுள் ‘வைதிக நெறி’ வேதமோதும் உரிமை யுடையோர்பாலும், ‘சைவ நெறி’ ஆகமநெறி நின்றோர்பாலும் இருந்து வந்தன! சில காலத்துக்குப் பின்னர், சிற்றறிவினர் சிலர், தமது கலைப் புலமையைப் பெருங்கருவியாகக் கொண்டு, வைதிக நெறியே உயர்ந்தது என்றும்; ஆகமநெறி தாழ்ந்தது என்றும், உண்மை உணர்வுக்குச் சிவாகமங்கள் ஆகா என்றும் குழறுபடை செய்தனர். சமயத் துறையில் இவ்வுயர்வு, தாழ்வு கற்பித்து ஒழுகுவது, புறச் சமயங்கட்கு ஆக்கமாவதையும் அவர்கள் உணராதுபோயினர். புறச்சமயத்தால் ‘கடவுள் ஒருவர் உண்டு’ என்ற கொள்கையும் ஐயப்படுவதாயிற்று! வைதிக ஒழுக்கம் இறந்து படுவதற்கேற்ற இடம் உண்டாயிற்று!... சிவஞானப் பாலுண்டு சைவநெறியை நிலைபெறச் செய்த திரு ஞான சம்பந்தர் முதலிய சான்றோர்கள் தோன்றி, வைதிக நூல்களும் சிவாகமங்களும் இறைவன் அருளிய மெய்ந்நூல்களே என்றும், இரண்டும்