பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தச் செம்மல்

107

“இறைவன், உயிர், உலகிற்கு முதற்காரணமாகிய மாயை என்ற மூன்றும், அனாதி நித்தியப் பொருள்- கள் எனவும்; இறைவனாகிய சிவம், தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி, உடல், கருவி, உலகுகளாகச் செய்வது ‘படைப்பு’ எனவும்; உயிர் கள் அனாதியே மலத்தொடக்கு உடையவை எனவும்; மலத்தின் மறைப்பு நீங்குதற் பொருட்டு உடல் கருவிகள் படைக்கப்படுகின்றன எனவும்; ‘உயிர்கள் பல’ எனவும்; பல எனவே உயிர்கள் ஒன்றினொன்று வேறு பாடுடையவெனவும்; வேறு பாட்டுக்கேற்பப் பிறப்புவேறுபடுகின்றனவெனவும்; உயிர்கட்கு அறிவு, விருப்பு,தொழில் என்ற மூன்று ஆற்றல் உண்டெனவும்; அவற்றைத் தொழிற் படுத்தி உண்மை ஞானம் எய்துதற் பொருட்டே உலகத் தொடர்பு உயிர்கட்கு உண்டாகிறதெனவும்; இங்ஙனம் உயிர்கட்கு உதவும் வகையில் சிவபரம் பொருள் உயிரோடு உடனாய் இருக்கின்றது எனவும் நம் சைவசித்தாந்தம் கூறுகிறது!”

என்று சிவஞான போதத்தின் திரண்ட கருத்தை - சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையை இனிதெடுத்துரைக்கும் இவரின் திறமே திறம்!

உரைவேந்தர், சைவசித்தாந்தத்தை மிகமிக எளிய முறையில், சாதாரண அறிவு படைத்தோரும் தெரிந்து கொள்ளுமாறு இனிய சான்றுகளால் விளக்குவதில் வல்லவர். பல்வேறு ஊர்களில், ‘சிவஞான போத’த் தைப் பல நாட்கள் தொடர்ந்து பாடமாகவும் நடத்தியுள்ளார்.

“சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கிச் ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப் பட்டத்தை அறிஞர் வழங்கிச் சிறப்பித்தனர்!”

என்று வ.சுப. மாணிக்கனார் போற்றுவர். ‘சைவசித்தாந்தச் செம்மலா’க விளங்கிய உரைவேந்தருக்குக் ‘கலாநிதி’ முதலான எத்துணைப் பட்டங்கள் கொடுத்தாலும் தகும், தகும்!