பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில்-உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு!”


என, உரைவேந்தரின் தெள்ளுதமிழ்த் தொண்டு குறித்துப் பாராட்டுகின்றார் பாவேந்தர் பாரதிதாசனார்.

பொதுவாக, ஒருவர் வாழ்ந்து மறைந்த பின்பே, அன்னாரைப் போற்றுவதும், சிலையெடுப்பதும், தமிழர்களின் நீண்ட நாட் பழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்நிலை மாறி, வாழும் காலத்திலேயே சீரும் சிறப்பும் செய்து போற்றும் நிலை வந்துள்ளது! உரைவேந்தர், தாம் வாழ்ந்த காலத்திலேயே பெரும்புகழ் எய்தியவர்! அதற்குப் பல காரணங்கள் உண்டு.

எளிய குடும்பத்தில் பிறந்தவர்தாம் உரைவேந்தர்; ‘இடைக்கலை’ வகுப்பைத் தொடர்ந்து முடிக்க முடியாத வீட்டுச் சூழலிலும், மனம் தளராமல், கரந்தை சென்று, தமிழ் பயின்று, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்றெல்லாம் படிப்படியாகப் பணிபுரிந்தவர் என்பது முன்பே சுட்டப்பட்டது! பொருள் வருவாய் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அவரது வாழ்வு, வேறுதிசையில் திரும்பியிருக்கும். குடும்பமோ மிகப்பெரியது; வருவாயோ போதிய நிலையில் இல்லை. நாள் ஒன்றுக்குப் பல நேரம் இரவு கண்விழித்து எழுதி எழுதிக் கையும் தேய்ந்துபோனது; பேருரைகள் பல எழுதிய அறிஞர்களின் வாழ்க்கையைக் கவனித்தால், அவர்களில் பலர், பணி ஏதும் பார்க்காமல், இரவு பகல் முழுவதுமே வீட்டிலிருந்து எழுதியவர்கள். ஆனால், உரைவேந்தரோ, தாம் ஓய்வு பெறுங்காலம் வரை, பணியிலிருந்து கொண்டே, தமது கடமை தவறாமலேயே, ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த மாண்பாளர். இதற்கெல்லாம் இவருக்கு உறுதுணையாக