பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

பட்டத்தைப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி அளித்துப் பாராட்டினார். துணைவேந்தர் மாணிக்கனார், உரைவேந்தர் குறித்துத் ‘தகுதியுரை’ படித்தளித்தார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், ‘தமிழ்த்தொண்டு செய்த பெரியார்’ என்ற வகையில், உரைவேந்தருக்குக் ‘கேடயம்’ பரிசாக வழங்கப்பட்டது. அப்போது அதனைப் பெறுதற்காக மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்தவர், “தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு நீங்கள் ‘வாள்’ அல்லவா தந்திருக்க வேண்டும்! எவரிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்!” என்று நகைச்சுவை படப் பேசினார்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் ‘ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு’ நடந்தபோது உரைவேந்தருக்கு இந்தியப் பிரதமர் பெருமைசால் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழியாகத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பத்தாயிர ரூபாய் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்!

மா.சு. சம்பந்தன், தாம் எழுதிய ‘சிறந்த பேச்சாளர்கள்’ என்ற நூலில், தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் பாரதியார், தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ப. ஜீவானந்தம் முதலியோரைக் குறிப்பிடும் சிறப்புப் பேச்சாளர் பதின்மரின் பட்டியலில், செந்தமிழ் நலம் துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளர்களாகச் ‘சொல்லின் செல்வர்’ ரா. பி. சேதுப் பிள்ளையையும், உரைவேந்தரையும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் இங்குச் சுட்டத்தகும்.

இவ்வாறு உயர்பண்புகள் ஒருங்கே கொண்ட ‘உரைவேந்தர்பால் குறை ஏதும் இல்லையா?’ என்று சிலர் கேட்கக் கூடும். ஆம்! ஒரே ஒரு குறை. அது, ‘மறதி’ என்னும் குறை. இளமைக் காலத்தே கற்ற நூற்கருத்தையும் மறவாமல், முதுமைக் காலத்தும் மறவாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவராயிருந்தாலும், தம்மிடம் உள்ள கண்ணாடியையும், ‘பொடி டப்பி’யையும் எங்காவது ஓரிடத்தில் வைத்துவிட்டு, ‘எங்கே கண்ணாடி?’ ‘எங்கே’, ‘பொடி டப்பி’ என்று நீண்ட நேரம் தேடி, ஒரு வகையாகக் கண்டெடுப்பது பெரு வழக்கமாகிவிட்டது!

தம் வீட்டின் பொருளாதார நிலை குறித்துச் சிந்தித்ததே இல்லை. நூல் பல எழுதியவரேயாயினும், அதனாலெல்லாம் பொருள் வருவாய் பெற இயலாத காலம்! அந்நிலையிலும் தம் குழந்தைகளை, ஓரளவு பொருள் சம்பாதிக்குமளவுக்குக் கல்வி வாய்ப்புக்கு உறுதுணை புரிந்துள்ளார். அவ்வளவே!