பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை (1902-1981): பேராசிரியப் பெருந்தகை. சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர்உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஔவை சு.துரைசாமி பிள்ளை, பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் ‘உரைவேந்தர்’ என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.

இந்நூலாசிரியர் ச. சாம்பசிவனார், உரைவேந்தரோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்; மதுரைத் திருவள்ளுவர் கழகச் செயலராக இருந்தபெருமை சாம்பசிவனார்க்கு உண்டு. இவர் எழுதிய நூல்கள்-75, கட்டுரைகள், கவிதைகள் பல, “செந்தமிழ்ச் செல்வர், தமிழாகரர், அருந்தமிழ் மாமணி, திருக்குறள் செம்மல்” எனப் பல்வேறு பட்டங்களும், தமிழக அரசின் ‘நல்லாசிரியர்’ விருதும் பெற்றவர்; சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, இலங்கை முதலான நாடுகட்குச் சென்று உலகளாவிய மாநாடுகளில் தலைமை தாங்கியும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுமுள்ளவர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மிக உயர்ந்த ‘மாட்சிமைப் பரிசு’ம் பெற்றவர்; ‘தமிழ் மாருதம்’ என்ற உலகளாவிய இலக்கியத் திங்கள் இதழின் ஆசிரியர். மதுரை நகரில் சிறந்ததொரு நூலகத்தையும் உருவாக்கியவர்.


Uraivendar Avvai Su. Duraisamipillai (Tamil) Rs. 25 ISBN-81-260-2366-X



சாகித்திய
அகாதெமி