பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லற ஏந்தல்

17


பின்பு, வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை (Intermediate) வகுப்பிற் சேர்ந்து பயின்றார். ஆனால் கல்வியைத் தொடர்ந்து படிக்க வாய்ப்பில்லாது போயிற்று.

தந்தைக்குப் பின்னர், தமையனார் மயிலாசலம் பிள்ளையின் பொறுப்பில் குடும்பம் இருந்தது; அவர்தம் துணைவியார் புண்ணியகோடி என்பவர். இவர்களின் நல்லாதரவு உரை வேந்தருக்கு இருந்தது எனினும், ஏதேனும் ஓர் அலுவல் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதலின் வருவாய்நாட்டத்தால், உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். ஆனால் அப்பணியில் நீடிக்க விரும்ப வில்லை. தமிழ்ப்பணி யாற்றுதற்கென்றே தோன்றியவராதலால், நகராட்சி மன்ற அலுவலிலிருந்து விலகினார்!

இளமையில் தமிழார்வம்

உரைவேந்தர், சைவக் குடும்பத்தில், அதிலும் தமிழின்மீது அளவிலாப் பற்றுக் கொண்ட குடும்பத்தில், செய்யுள் இயற்றும் வன்மையுடைய ஒருவரின் திருமகனாராகப் பிறந்தவராதலின் இயல்பிலேயே தமிழ்ப்பற்றுக் கொண்டவராயிருந்ததில் வியப் பில்லை, மேலும், அ.ஆ.ந. உயர்நிலைப் பள்ளியில் உரை வேந்தருக்குத் தமிழறிவுறுத்தியவர், தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார் ஆவார். அப்போதே, தம் தமிழாசிரியர்பாலிருந்து ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியினை ஆராயும் திறன் பெற்றிருந்தார் உரைவேந்தர். படிப்பை முடித்து, நகராட்சியில் அலுவல் பார்க்கத் தொடங்கியவர், ஆறே மாதத்தில் விலகி விட்டாரெனில், அதற்கு அவர்பாலிருந்த ஆழ்ந்த தமிழார்வமே காரணம் எனலாம். அவரது மனத்தில் ஓயாது அலைமோதிக் கொண்டிருந்த எண்ணம், ‘தமிழை முறையாகப் பயில வேண்டும் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ வேண்டும்’ என்பதேயாகும்!

கரந்தைக் கல்வி

அக்காலத்தில், தஞ்சையையடுத்துள்ள ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ தமிழுக்குச் செய்த தொண்டுகள் எண்ணில் பலவாம். ‘தமிழவேள்’ எனத் தரணிபோற்றும் த.வே. உமாமகேசுவரனார் அதன் தலைவராக இருந்து, அளப்பரிய தொண்டுகள் புரிந்து வந்தார்!

தனித்தமிழ் பயில்வதற்கு ஏற்ற இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்றுணர்ந்த உரைவேந்தர், தமது 22ஆம் வயதில், சொந்த ஊரான