பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியராக இருந்து, பின்னர்க் கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரித் தலைவராகவும் இருந்தவர். சிலப்பதிகாரம், அகநானூறு முதலான நூல்களின் உரையாசிரியர்.

இவ்விருவர்பாலும் தமிழ் கற்றுத் தமிழாசிரியராக வர வேண்டும் என விரும்பியதனால்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நாடி வந்தார் உரைவேந்தர்.

ஒருவரைப் பார்த்த அளவிலேயே அவரின் திறமையை அளந்தறியும் ஆற்றல் பெற்ற ‘தமிழவேள்’, தம் சங்கத்தின் பெருமைகருதி வந்த உரைவேந்தரைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியிலமர்த்தினார். அதனுடன், சங்க நூலகப் பணியும் தரப்பெற்றது. இவ்விரண்டுமே, உரைவேந்தர் மனம் மகிழும் நற்பணிகளாயின.

உரைவேந்தர், தம்முடைய அருங்குணம், அருஞ்செயல்களால் தமிழவேளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து கொண்டார் என்பதற்குச் சில சான்றுகள் காட்டலாம்.

சங்கத்தின் சார்பில், ‘தொல்காப்பியம் - தெய்வச் சிலையார் உரை’ நூல் வெளியிட ஏற்படாயிற்று. ஒலைச் சுவடி படிப்பதில், முன்பே பயிற்சி பெற்றவர் உரைவேந்தர். எனவே தெய்வச் சிலையார் ஏட்டினைப் படித்து, அதனைப் பகர்த்து எழுதும் பணி இவருக்குத் தரப்பட்டது. அப்போது, தமிழவேள் உரைவேந்தரை யழைத்து, ‘Juries to Students’ என்ற ஆங்கில நூலைக் கொடுத்து, ‘முதலில் இந்த நூலைப் படிக்கவும்’ என்று கூறினார். உரை வேந்தரும் அதனைப் படித்து இன்புற்றார்.

‘தமிழவேள்’ தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாளைய சென்னை மாகாண ஆளுநர் சர். ஆர்தர்ஹோப் என்பவர் பேசிய ஆங்கிலப் பேச்சை அப்படியே ஏற்ற இறக்கத்துடன் தமிழில் மொழிபெயர்த்து, அனைவரின் பாராட்டைப் பெற்றவர். இத்துணையளவு ஆங்கிலப் புலமையிருந்தும் மற்றவர்களுடன் தமிழில்தான் உரையாடி மகிழ்வார்! இவருடனிருந்து பழகிய பான்மையினால்தான், உரைவேந்தரும், பிற்காலத்தில் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் புலமைபெற முடிந்தது!

“திரியின்மை நீக்கிய விசேடம், இயைபின்மை நீக்கிய விசேடம் என்ற இடங்களிலும் எங்கள் ஐயத்தைத் தமிழவேள் போக்கினார். இதுபோல் பல சமயங்களில் எங்கட்கு ஆசிரியராகவும், சிக்கல்களில் நடுவராகவும்