பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை


உரைவேந்தரின் மூத்த மகனார் ஒளவை. நடராசனார், தம் தந்தையைப் போன்றே சொல்லேருழவர். தமது விடாமுயற்சியால் பல்வேறு உயர்பதவி வகித்துத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்து பேரும் புகழும் பெற்றவர்!

ஏனையோரனைவருமே உயர் படிப்புப் படித்துப் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்குகின்றனர்.

உரைவேந்தரின் மக்கள் பதினொருவரில், பிறந்தவுடனே இறந்த இருவர் போக எஞ்சிய ஒன்பது பேரில், மூத்தமகள் பாலகுசமும், மகன் திருஞானசம்பந்தனும் இயற்கை எயதி விட்டனர்!

சற்றுப் பருமனான உடம்பு; குட்டையான வடிவம்; முழுக்கை (ஜிப்பா)ச் சட்டை; அடிக்கடி ‘பொடி’ போடும் பழக்கம்; தலைமுடியைக் குறைத்து வைத்திருப்பார் நெற்றியில் திருநீற்றின் மணம் வீசும் வீட்டில் கைமேசை வைத்தே எழுது வார்; பெரும்பாலும் ‘பேனா’வைப் பயன்படுத்தாமல் மைதொட்டு, அழகாக நிறுத்தி எழுதுவார்; எப்போதும் தமிழ் - சைவச் சிந்தனையே! குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்வதில் வல்லவர்; மறந்துங்கூட மனைவியிடத்திலோ, பிள்ளைகளிடத்திலோ கடிந்து பேசமாட்டார்! செந்தமிழ் நடையில்தான் பேசுவார்! ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு நூலைப் படித்தபின் தான் படுக்கைக்குச் செல்வார்; பெரும்பாலும் அஃது ஆங்கில நூலாகவே இருக்கும்!

இவ்வகையில் ‘இல்லற ஏந்தலா’கத் திகழ்ந்தவர் ‘உரைவேந்தர்’ எனலாம்.