பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

தமிழ் ஏடுகளைப் படித்து உண்மை காண்டல் என்பது ஓர் அரிய செயல். இது குறித்து உ.வே. சாமிநாத ஐயர் என் சரித்திரத்தில் கூறுவது இங்கு நோக்கத் தகும்:

"பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு. இது கொம்பு, இது 'சுழி', என்று வேறுபிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்குப் புள்ளியே இராது. 'ரகரத்திற்கும், 'காலு'க்கும் (ரா) வேற்றுமை தெரியாது. 'சரபம்', 'சாபமா' கத் தோற்றும்; 'சாபம்', 'சரபமா'கத் தோற்றும். "இடையின 'ரகரத்திற்கும், வல்லின 'றகரத்'திற்கும் பேதம் தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல! உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல!”

-இத்தகைய இடர்ப்பாடுகள் உள்ளமையால்தான், தமிழ்ப் புலவர் பலரும் ஏடுபடிப்பதிலும், படி எடுப்பதிலும் ஆர்வம் காட்டாது போயினர். அந்த நிலையிலும் ஒரு சிலர் அரும்பாடுபட்டு அவற்றை நுட்பமாகப் படித்துப் பொருள் உணர்ந்து, நூல் வடிவில் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் உரைவேந்தர்!

உரைவேந்தர் கரந்தையிலிருந்தபோது தம் ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்கச் சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த உ.வே. சாமிநாத ஐயரிடமிருந்து தொல்காப்பியம்-சொல்லதிகாரம்- தெய்வச் சிலையார் உரையின் ஏட்டுச்சுவடியை வாங்கிவரச் சென்றார். ஆங்கு ஐயரைக் கண்டு, விவரம் கூறினார். அவரும் அந்த ஏட்டை உரைவேந்தரிடம் கொடுத்து, இதனைப் படி என்று சொல்ல, எவ்விதப் பிழையுமின்றி ஏட்டினைப் படித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயர், "நீங்களும், ஏட்டில் உள்ள பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம்; அதற்கான தகுதி உங்களிடம் உள்ளது!" என்று பாராட்டினார். அப்பாராட்டு, உரைவேந்தருக்குப் பேருக்கம் அளித்தது. அன்றுமுதல், ஏடு படித்து ஆராய்வதில் மேலும் ஆர்வமுடையவரானார்!