பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

முழுமையாகத் தெரிவதற்கில்லை. இருப்பினும் இன்றியமையாத நூல்களைப் பற்றியும், உரைகளைப் பற்றியும் இவண் அறியலாம்.

சங்க இலக்கியமான எட்டுத் தொகையில் நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு எனும் நான்கு நூல்களுக்கு விரிவான விளக்கஉரை எழுதியுள்ளார் உரைவேந்தர். ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. ஈண்டுச் சிலவே சுட்டப்படுகின்றன.

புறநானூறு மூலமும் உரையும்

400 பாடல்கள் கொண்ட இதனை முதன்முதல் அச்சேற்றி நூல்வடிவில் கொணர்ந்தவர் உ.வே. சாமிநாத ஐயராவர்! எனினும் உரைவேந்தர் எழுதிய இந்நூலில் சில தனிச் சிறப்புக்கள் உண்டு.

உண்மையில் இந்நூலுக்குப் பழையோர் ஒருவர் எழுதிய பழைய உரையும் ஒன்று உண்டு. அஃது 1 முதல் 266 வரையுள்ள பாட்டுக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 267,268 ஆகிய இரண்டும், முற்றிலுமாக இல்லை. 269 முதல் 400 வரையுள்ள பாடல்களுக்கு உ.வே. சாமிநாதஐயர் குறிப்புரை தந்துள்ளார்.

உரைவேந்தர் எழுதிய உரைநூல், இரண்டு பகுதிகளாக 1947; 1951ஆம் ஆண்டுகளில் வெளிந்துள்ளன.

எனினும் பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர், புத்துரை வரைந்திருப்பது பெருஞ் சிறப்பாகும்.

உ.வே.சா.வின் புறநானூற்றுப் பதிப்பை ஒப்பிட்டுச் செப்பம் செய்வதற்கு வாய்ப்பாகப் புறநானூறு ஓலைச்சுவடி ஒன்று உரைவேந்தருக்குக் கிடைத்தது. பல்கலை வல்லுநரும் பெருஞ் செல்வருமாகிய அரித்துவாரமங்கலம் வா.கோபாலசாமி ரகுநாத ராசாளியாரின் விருப்பப்படி, அவரிடமிருந்த புறநானூற்று ஓலைச் சுவடியைப் பள்ளியூர்த் தமிழாசிரியர் கிருட்டிணசாமி சேனை நாட்டார் 'படி' எடுத்து வைத்திருந்தார். அந்தப் 'படி'(copy) உரைவேந்தரின் புறநானூற்றுப்பதிப்புக்கு அடித்தளமாக அமைந்தது. உ.வே.சா.வின் அச்சுப்புத்தகத்தில், பின்னுள்ள 200 செய்யுட்களில் சிலபாட்டுக்களில் விடுபட்டிருந்த அடிகளும், சிலவற்றில் சில திருத்தங்களும், இந்த ஓலைச் சுவடி உதவியினால் செப்பம் பெற்றன. இது குறித்து உரைவேந்தர்,