பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.39
நூலாசிரியர்

"இப் பிரதி திரு. டாக்டர் ஐயரவர்களுக்குக் கிடைக்காது போனது பற்றி என் மனத்தில் ஐயமொன்று ஊசலாடிக் கொண்டிருந்தது. டாக்டர் ஐயரவர்களுடைய முயற்சிக்கும் அகப்படாத நிலையில் ஏடுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன என்று ஐயம் தெளிந்தேன்!”

என்கிறார்.

பதிற்றுப்பத்து உரை

பண்டைநாளைச் சேமன்னர் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிவது 'பதிற்றுப்பத்து' என்னும் சங்க இலக்கிய நூலாகும். இதனை முதன்முதல் 1904ஆம் ஆண்டு, பழைய உரையுடன் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். இந்த அச்சுப் பதிப்பை வேறு இரண்டு சுவடிகளுடன் ஒப்பு நோக்கி விளக்கவுரை எழுதினார் உரை வேந்தர். அப்பதிப்பு 1951இல் கழக வெளியீடாக வெளிவந்தது.

'பதிற்றுப்பத்து'க்கு உரைவேந்தர், உரை எழுதுவது அறிந்த அவருடைய ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளை, மிக்க மகிழ்ச்சி கொண்டு, தாம் அந்நூலுக்கு எழுதி வைத்திருந்த உரையையும் கொடுத்து உதவினார், அவ்வாறே ந.மு.வே. நாட்டாரும், "பதிற்றுப்பத்துப் பதிகங்கள், ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டா பதிற்றுப்பத்து ஒலைச் சுவடியில் 'கடவுள் வாழ்த்து'ச் செய்யுள் காணக்கிடைக்கவில்லை யாதலால் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் வரும் எரியன்ன நிறுத்தன் என்று தொடங்கும் பாடலையே கடவுள் வாழ்த்தாகக் கொள்ளலாம்!" என்றும் உரைவேந்தருக்குக் கூறினார். இவ்வகையில் தம் ஆசிரியர் இருவர்க்கும் உரைவேந்தர் நன்றி பாராட்டுகின்றார்.

பதிகங்களுக்கு உரை எழுதப் பெறவில்லை ஆதலால், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய 'பதிகங்கள் பற்றிய ஆராய்ச்சி'யை, இப்பதிற்றுப்பத்து நூலின் முன்னுரையில் அமைத்துக்கொண்டார் உரைவேந்தர்.

ஐங்குறுநூறு உரை

சங்க இலக்கியங்களில் ஒன்றான 'ஐங்குறுநூற்றி'ல், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்து அகத்திணைப் பாடல்கள்