பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41
நூலாசிரியர்

சுவடியிலிருந்து இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சு வடிவில் கொணர்ந்தவர்.

ஒருமுறை, சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தின் செயலாளராக இருந்த மா. பாலசுப்பிரமணிய முதலியாருடன், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் காணச் சென்றார் உரைவேந்தர். அப்போது, உரைவேந்தரின் ஐங்குறுநூற்று உரை விளக்கத்தைத் தாம் படித்து மகிழ்ந்ததாகக் கூறிய வையாபுரிப் பிள்ளை, தம்மிடமிருந்த 'நற்றிணை' ஏடு ஒன்றைத் தந்து, 'இதனையும் நீங்கள் ஆராய்ந்து வெளியிட வேண்டும்' என்று கூறினார். அவ்வாறே நற்றிணைக்கு உரைஎழுதத் தொடங்கிய உரைவேந்தர், பின்னத்துராரின் அச்சுப் பதிப்பை, நற்றிணையின் நான்கு ஏடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாட வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே, போதிய உரை விளக்கத்துடன் கூடிய நற்றிணையை உருவாக்கினார் இவர்!

"கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவை காண்பது போலப் பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது, பழைய உரைகாரர் களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறை யாகும். அம்முறையிலேயே இவ்வுரையும் அமைந் திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ, பரிமேலழகர் முதலியோர் உரையோ?” எனப் பல முறையும் நம்மை மருட்டுகிறது!"

என இந்நூலின் சிறப்பை விதந்து பாராட்டுகின்றார், 'கலையன்னை' இராதா தியாகராசனார்!

காப்பிய நூல்கள்

ஐம்பெருங் காப்பியங்களில், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலான மூன்றுக்கும்; ஐஞ்சிறுகாப்பியங்களில் சூளாமணி, யசோதர காவியம் எனும் இரண்டுக்கும்; உரை கண்டுள்ளார் உரைவேந்தர். இவற்றில் முதல் மூன்றுக்கும் 'சுருக்கம்' எழுதியதனோடு அமையாமல் விரிந்த 'ஆராய்ச்சி’யும் எழுதியுள்ளார்.