பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.43
நூலாசிரியர்

மகளாக மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவை ததும்பச் சொல்லும் சீர்மையுடையதாகும்!”

உரைவேந்தர், செங்கம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோதே எழுதிய நூல் 'சீவக சிந்தாமணிச் சுருக்கம்!' ஏறத்தாழ 3000க்கு மேற்பட்ட செய்யுட்கள் கொண்ட இந்நூலினைப் படிக்க மலையுறுவோர்க்குப் பெரிதும் பயன்படுமாறு கதைத் தொடர்பும், இனிமையும் குறையாதவாறு, சுருக்கி எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் இது நூலின் தொடக்கத்தில் ஓர் ஆராய்ச்சி முன்னுரையும் தந்துள்ளார்!

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான 'சூளாமணிச்சுருக்கம்' கழக வெளியீடாக 1970இல், வெளி வந்துள்ளது. இதன் முன்னுரையில் உரைவேந்தர் எழுதும் பகுதி, சிந்தனைக்கு விருந்தாக உள்ளது:

“சமணமுனிவர்கள் நம் இனிய தமிழ் மொழிக்கண் செய்துள்ளகாவியங்களுள், தேன் மணக்கும் தமிழ் நடையும், செம்மை மணக்கும் கருத்துக்களும் கொண்டு, படிப்போருள்ளத்தை உண்மைப் புலமையின் நுட்பத்தை நன்கறிந்து பேரின்ப மடையச் செய்யும் பெருமை யுடையது, இச் 'சூளாமணி' யேயாகும்... இயற்கை யன்னையின் இன்பத் தோற்றத்தை நம் உள்ளக் கிழியில் எழிலொழுக எழுதிக் காட்டும் இனிய தூரியக் கோல் இச் செந்தமிழ்க் காவியம் என்பதற்கு என் உள்ளம் ஆசைப்படுகின்றது!”

இவ்வாறு கூறும் இவர், இந்நூலினைச் சிறுகாப்பிய வரிசையில் சேர்த்தவரின் சிறுமை எத்தகையது என்பதைப் பின்வருமாறு சுட்டுகின்றார்:

"சிறுகாவிய மென்பனவற்றுள் இதனை ஒன்றாக வைத்தவர், சிறுமை பெருமைகளைத்தெரிந்துணரும் மதுகையில்லாதவர் என்று கூறலாம்; ஏனெனில் காவிய நெறியிலாதல், கவிநடையிலாதல், கருத்து வகையிலாதல் இதன்கண் எத்தகைய சிறுமையும் காணப்படவேயில்லை”