பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

45

ஓய்வின்றி உழைக்கும் எந்திரமொன்றும் உழைப்பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல், உடலோடியங்கும் உயிரும் மனத்தகத்தே தளர்ச்சியும், தூய்மையில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக்கு அகற்றப்படுவது போல, மனமும் நாடோறும் தூய்மை செய்யப்பட வேண்டும். அதற்கு இசையே உரியதாகும். இசை, மனத்திற்படியும் திய உணர்வுகளைப் போக்கி நல்லுணர்வுகளை-எழுப்புவதாகும். 'ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை' என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந் தருளினர். சென்ற நூற்றாண்டில் செருமனியில் வாழ்ந்த ஆவர் பாச் (Averbach) என்பவர், 'மனத்திற்படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை' என்று கூறினார். ...இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து, அதனை விலக்குவது அறமன்று!... பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'மார்டின் லூதர்' என்பவர், சமய உணர்வுகளுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத் தகுவது இசையே என்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள், தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற் கருஞ் செயல்களைச் செய்தனர் என்றும் கூறுவாராயினர்!"

இம்முன்னுரை ஒன்றே போதும், உரைவேந்தரின் நுட்பமான புலமைத் திறத்தை அறிந்து கொள்ள! அன்றியும் இவரது ஆங்கில மொழியறிவு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதும் இதனால் அறியலாம்.

சமய நூல்கள்

உரைவேந்தர், அன்னைத் தமிழின்பால் எத்தகைய புலமையும் ஈடுபாடும் கொண்டவரோ, சைவசமயத்தின்பாலும் அவ்வாறே ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய சைவசமய-சைவசித்தாந்த நூல்கள் சிலவேயாயினும், மிக்க பெருமையுடையன.