பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலாசிரியர்

49

என்று உரைவேந்தர் கூறுவதுகொண்டு, ஞானாமிர்த நூலைப் பதிப்பிக்க மேற்கொண்ட இவரது முயற்சி தெரிகிறது.

பின்னர்க் குன்றக்குடியில், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஓர் ஆண்டு விழாவில், ஞானாமிர்தம் என்ற பொருள் பற்றி உரைநிகழ்த்தினார் உரைவேந்தர். அதனைக் கேட்ட 'சித்தாந்த சரபம்' ஈசான சிவாசாரியார், இவரை அன்போடு நோக்கி, 'இரும்புக் கடலையைப் பக்குவமாக வேக வைத்துவிட்டீர்கள்!' என்று பாராட்டினார். பண்டிதமணியும், சிவக்கவிமணியும், இந்நூலை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு உரைவேந்தரிடம் கூறினர்.

ஆனாலும் ஏடுதேடும் முயற்சியைக் கைவிடாமல், மேலும் சில கிடைக்கின்றனவா என்று முனைப்போடு செயல்பட்டார் உரைவேந்தர். நெல்லைக்கு அருகே இருந்த இராசவல்லிபுரம் சென்று, செப்பறைமடத்துத் தலைவராக இருந்த அழகிய கூத்தத் தேசிகரைக் கண்டு, உரையுடன் கூடிய ஞானாமிர்த ஏடு ஒன்றினைப் பெற்றார். அதன் பின்பு மேலும் சில ஏடுகள் கிடைத்தன. பெருமண்டுர்ச் சீபாலன் எழுதிய ஏடு ஒன்று திருவெண்ணெய் நல்லூர் ஏடு ஒன்று; ஏனாதிபாடி ஏடு ஒன்று. இவ்வேடுகள் அனைத்தையும், மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீட்டுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் வேறுபாடுகள் பல கண்டு, புதிதாகக் குறிப்புரையுடன் ஞானாமிர்த நூலை வெளியிடத் துணிந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைத் தலைவராக விளங்கிய கா.சுப்பிரமணிய பிள்ளையும், 'பல்வேறு ஏடுகளை ஒப்புநோக்கி, வேண்டிய ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு இந்நூலை வெளியிட வேண்டும்' என்று கூறி, உரைவேந்தரின் இனிய நண்பர் க.வெள்ளைவாரணனாரை உறுதுணையாக வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார்.

ஆனால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்தபோது செய்துவந்த இந்நூல் வெளியீட்டுப் பணி, மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்த பின்னரே நிறைவு பெற்றது. அதற்கு முழு ஆதரவு நல்கிய கருமுத்து, தியாகராசச் செட்டியாருக்கு நூன் முன்னுரையில் நன்றி தெரிவித்துள்ளார் உரைவேந்தர்!

அண்ணாமலைப்பல்கலைக் கழக வெளியீடாக வந்த மற்றொரு சைவசித்தாந்த நூல், 'சிவஞானபோத மூலமும் சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்' என்பது.

சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. இவற்றிற்கெல்லாம் மணிமுடியாய்த் திகழ்வது, மெய்கண்டார் அருளிய 'சிவஞான போதம்'.