பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

55


உரைவேந்தர், சைவ நூல்கள் தோன்றி வளர்ந்த கால நிலை, சூழ்நிலையை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு, சைவ இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயாகத் தமிழ்நாட்டு வரலாற்றைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். ‘திருஞான சம்பந்தர்’ முதல், வேம்பையர்கோன் நாராயணன்' ஈறாகவுள்ள ஆசிரியர் வரலாறுகளை எழுதியுள்ளார்!

இந்நூலின் சிறப்புக் குறித்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தி.மு.நாராயணசாமி பிள்ளை,

“பிள்ளையவர்கள் தமது புலமைநலம் அனைத்தும் தமிழ் நாட்டிற்குப் பயன்படும் முறையில் இவ் இலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதி யுள்ளார்கள்!”

என்று பாராட்டுகின்றார்.

இவ் இலக்கிய வரலாறு மேலும் தொடர்ந்து வெளிவர வில்லை. உரைவேந்தர் மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்தமையே காரணம்.

“...... ஆசிரியர் வரலாறுகள் எழுதிமுடித்ததும், யான், மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டதனால் இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளிவர வேண்டுவதாயிற்று. இக்கால எல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு, இன்னும் காணப்படவில்லை! அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதானமையின் இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்!”

என உரைவேந்தர் வருந்தியுரைப்பது, இவரது சைவ இலக்கியப் பற்றினைப் புலப்படுத்துவதாக உள்ளது.