பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை


உரைவேந்தர் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்பிடத் தக்க பெருமைக்குரியது, ‘பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு’. இந்த நூலை எழுத இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளப்பரியன. இது குறித்து உரைவேந்தர் கூறுவது இவண் அறியத்தகும்:

“சங்க காலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயத் தலைப்பட்டபோது, சேரநாட்டைப்பற்றிய குறிப்புக் களைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று. அக்காலை, மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும்; நம் நாட்டவரான திரு. நாகமையர், திரு.கே.பி.பதுமநாப மேனன், திரு.கே.ஜி. சேவைடியர், திரு. சி.கோபாலன் நாயர் முதலியோர் எழுதியுள்ள நூல்களும்; திருவாங்கூர்,கொச்சி, குடகு, தென் கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளயிடுகளும் பெருந்துணை செய்தன. பழை யங்காடி, உடுப்பி, ஹொன்னாவர், கோழிக் கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய பேரூர்களில் வாழ்ந்து வரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புக் களும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன. அதனால் சேரர் வரலாற்றைக் காண்பதற்கெழுந்த வேட்கை உறுதிப் படுவதாயிற்று. "சேர நாடு, கேரள நாடாயினபின், சேரமக்கள் வாழ்ந்த ஊர்களும் அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கின வாயினும், பழங்கால இலக்கியக் கண்கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமற் போக வில்லை!”

இந்நூலில், இவர் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களும் பலவாம். தமிழ் இலக்கண இலக்கியங்கள் தவிர, வடமொழி - ரிக் வேதம், தைத்திரீய ஆரணியகம், வியாசபாரதம், கல்வெட்டு, செப்பேடு, பிறவரலாறு, ஆராய்ச்சி உரைகள் எனப்பலவும் காட்டியுள்ளார் உரைவேந்தர். டாக்டர் எம்.எஸ். வைரண பிள்ளை, இந்நூலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில், இவரைப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மா. இராசமாணிக்கனாரும், “இதுவரையில், இருள்படர்ந் திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு, இவ்வரலாற்று நூலால் விளக்க மடையும் என்று கூறுதல் பொருந்தும்!” என்று பாராட்டுகின்றார்.