பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

பெரும்பயனை விளைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நமது நாட்டு வரலாற்றில் சிறந்து விளங்கிய வேந்தர் சிலருடைய வாழ்க்கை நிகழ்ச்சி களில் சிலவற்றைத் தேர்ந்து சிறுகதை வடிவில் கூறுவது கருத்தாகக் கொண்டு, ‘வரலாற்றுக் காட்சிகள்’ என்ற தலைப்பில் இந்த நூல் தோன்றுகிறது...!”

என்று உரைவேந்தர், நூல் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அவ்வாறே, தமிழகச் செய்திகள், சங்ககாலச் சோழர், சங்க காலப் பாண்டியர், பல்லவ வேந்தர், இடைக்காலப் பாண்டியர், இடைக் காலச் சோழர் என்னும் தலைப்புகளில் சுவையான வரலாற்றைத் தந்துள்ளார் உரைவேந்தர். ஆங்காங்கே கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன.

இவை தவிர, ‘மதுரைக் குமரனார்’(கழகம்) ‘ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை’ (தருமையாதீனம் 1945), ‘சிவபுராணம்’ (ஆம்பூர் சைவசித்தாந்த விழா - 1940), தெய்வப்புலவர் திருவள்ளுவர் (கழகம்) ‘மருள் நீக்கியார் நாடகம்’, ‘மத்தவிலாசப் பிரகசனம்’ (மொழிபெயர்ப்பு) என்னும் நூல்கள் தவிர ஆங்கிலத்திலும் Introduction to the Study of Thiruvalluvar என்ற நூலும் எழுதியுள்ளார் உரைவேந்தர்.

இனி இவர், அவ்வப்போது, ‘தமிழ்ப்பொழில்’, ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘செந்தமிழ்’ முதலான இதழ்களிலும்; விழாமலர்களிலும், எழுதிய கட்டுரைகள் எண்ணில் பலவாம். மாநாட்டுத் தலைமை யுரையாகவும், விரிவுரையாகவும், வரவேற்புரையாகவும் இவர் ஆற்றிய செந்தமிழ் உரைகளும் உண்டு. இவற்றில் ஒரு சில தனித்தனி நூல்வடிவம் பெற்றுள்ளன. வெளிவராத கட்டுரைகளனைத்தையும் தொகுத்தால், பல நூல்களாக அமையும்!

1940 ஆம் ஆண்டில் ஆம்பூரில் நடந்த சைவசித்தாந்த விழாவில் இவர் ஆற்றிய பேருரை, ‘சிவபுராணம்’ என்ற தலைப்பாகவும் தூத்துக் குடி சைவசிந்தாந்த சபை 65 ஆம் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை, சிறுதுண்டு வெளியீடாகவும், மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் மணிவிழா மலரில் (1954) வெளிவந்த கட்டுரை ‘ஊழ்வினை’ என்ற தலைப்பாகவும்; தமிழ்ப் பொழிலில் வெளிவந்த கட்டுரை ஒன்று(1930) ‘ஆர்க்காடு’ என்ற தலைப்பிலும் சிறுசிறு வெளியீடுகளாக ஒளவை நடராசனால், உரைவேந்தரின் நினைவு நாட்களின்போது வெளிக் கொணரப்பட்டன.