பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


உயர்ந் தோர்க்குத் ‘களப்பாளராயர்’ என்றும்; வாணர்களை வென்று சிறந்தோர்க்கு ‘வானாதி ராயர்’ என்றும், மழவர்பால் வெற்றி பெற்றோர் ‘மழவராயர்’ என்றும் இவ்வாறே பிறரும் சிறப்புப் பெற்றனர். இப்பெயர் கொண்டவர் பலரும் தமிழ்

வேளாண் மக்களேயாவர்”

என்று கூறும் உரைவேந்தர், ‘சிவஞான போத மூலமும் சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்’ என்ற நூலில், ‘களப்பிரர்’ பற்றி விரிவாகவும் ஆய்வு செய்துள்ளார்.

கல்வெட்டுச் சான்று தருதல்

உரைவேந்தர், கல்வெட்டுக்களிலும் ஆழ்ந்த பயிற்சி உடையவராதலின், உரைகூறும் இடங்கள் பெரும்பாலானவற்றில் கல்வெட்டுச் சான்றுகள் தருவதிலும் வல்லமை பெற்றவராக விளங்குகின்றார்.

சங்கப் புலவருள் ஒருவர், ‘தாமற்பல் கண்ணனார்’. இவரைக் குறித்து உரைவேந்தர் எழுதும் விளக்கம் வருமாறு:

“இவர், பார்ப்பனர்; கூர்த்த புலமை நலம் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும் நல்லறிஞர். ‘தாமப் பல்கண்ணனார்’ என்றும் பாடம் உண்டு. ‘தாமல்’ என்ற ஊரினர். இது, காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளது. இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ்வூர் மிகச் சிறப்புற்று விளங்கிய தென்பதை இவ்வூர்க் கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் ‘தாமர்’ என்று கூறுதலின் (S.I.Vol. V. 1004 A.R. 139 of 1896) இவர் பெயர் ‘தாமர்ப்பல்கண்ணனார்’ என இருக்க வேண்டும். ஏடெழுதினோர் ‘தாமற்பல் கண்ணனார்’ என எழுதிவிட்டனர். ‘பல்கண்ணன்’ என்பது இந்திரனையும் குறிக்கும் பெயர்!”

உரைவேந்தர் காட்டும் கல்வெட்டுச் சான்றுகள், எண்ணில் பலவாக உள்ளன. ஈண்டு மற்றொன்றும் காட்டுதல் பொருந்தும்.