பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

73

செந்தமிழ் நாட்டு நல்லிசைப் புலவர் பெயர்கள் பலகொண்டு தெரியலாம். “இனி வடமொழியிலுள்ள வான்மீகி முனிவர் வழியினர் இவராவரென்று கருதுவாருமுண்டு. (தமிழ் வரலாறு, பக்.246) என்று திரு.ரா. இராகவையங்கார் அவர்கள் கூறுவர். இதனால் இப்புறப்பாட்டாசிரியர் காலத்தில் வடவர் கூட்டுறவு, தமிழகத்தில் நன்கு பரவியிருந்த தென்பது தெளிய விளங்குகிறது! “இந்தப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் ‘வான்மீகையார்’ எனவும் காணப்படுகிறது. வாள்மீகையார் என்பது உண்மைப் பாடமாயின் இது, செந்தமிழ்ச் சான்றோர் ஒருவரது தமிழியற் பெயராம்!”

தமிழர் நிலை குறித்து இரங்குதல்

உரைவேந்தர் நூல்களை நுணுகி ஆராய்ந்தால், பண்டைத் தமிழரின் வீறு கொண்ட வாழ்வும், பிற்காலத்தே வீழ்ச்சியுற்ற நிலையும் சுட்டிச் செல்வது புலனாகும். இதற்கு ஒரு சான்று:

புறநானூறு இறுதிப்பாடல் ‘மாக விசும்பின் வெண்டிங்கள்’ என்பது. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. இதில், இடையிடையே சில அடிகள் இல்லை! கிடைத்த பிரதியிலும் இரண்டொரு திருத்தம் தவிர, இப்பாட்டின் முழுவடிவமும் கிடைக்கவில்லை! இது குறித்து மனம் நொந்து எழுதுகின்றார் உரைவேந்தர்:

“இடைக்காலத் தமிழகம், தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தி யிருக்குமாயின், ஆ! இத்தமிழகம், இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறியில் வீழ்ந்து, அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில், அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது. பிறநாட்டார் தலைவணங்க இருந்த தனது