பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

75


வாயாத்துரிசு

வாய்மை அல்லாத பொய்ம்மைக் குற்றம்.

சம்பு

சிவபெருமானைச் சிறப்பிக்கும் பெயர் ஆயிரத்துள் ‘சம்பு’ என்பதும் ஒன்று. ‘சம்பு’ என்பது நாவல் மரத்துக்கும் பெயர். நாவல் மரங்களைச் சிறப்பாகவுடைமை பற்றி நமது பாரத நாட்டை ‘நாவலந் தீவு’ என்றும், ‘சம்புத்தீவு’ என்றும் புராணிகர் உரைப்பர்.

ஞானாமிர்தம்

‘ஞானமாகிய அமுதம்’ என விரியும். ஞானமாவது சிவநெறி பற்றிய அறிவு. சிவம், உயிர், உலகு என்ற முப்பொருளின் உண்மையும் ஒவ்வொன்றிற்கும் உள்ள இயல்பும் தொடர்பும் அறிந்து கொள்ளும் அறிவு. அமுதம், தன்னை உண்டாரை உலகில் நெடிது செய்யும் இயல்புடையது; அதுபோலவே சிவநெறி பற்றிய அறிவாகிய ஞானம், வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, சிவ பரம்பொருளின் திருவருள் இன்ப வாழ்வில் என்றும் பொன்றாது நின்று நிலவச் செய்யும் செயல் நலம் உடையது.

அருஞ்சிறை

உடம்பு, நீங்குதற்கு அரிய சிறை. எத்துணைத் துன்பம் உறினும், உயிர் அதற்கு ஏதுவாய தன்னையே காதலித்துத் தன்னகத்து வாழ்வதையே காதலிக்கச் செய்யும் அருமையுடைமை பற்றி ‘உடம்பு’, ‘அருஞ்சிறை’ எனப்பட்டது.

இவை போன்ற சொற்பொருள் நயங்களை, உரைவேந்தரின் நூல்களில் பரக்கக் காணலாம்.

ஊரின் உண்மைப் பெயர் இயம்பல்

வரலாற்றாசிரியர் ஒருவர்க்கு உண்டான ஆய்வு நோக்கு, உரைவேந்தர்பாலும் இருந்தமையாலும்; கல்வெட்டு செப்பேட்டுப் பயிற்சி பெற்றவராகத் திகழ்ந்தமையாலும், தமிழகத்து ஊர்ப் பெயர்களின் உண்மைதனை ஆங்காங்கு எடுத்து மொழிகின்றார். இங்கே ஒரு சில மட்டும் தரப்படுகின்றன: