பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

தொல்காப்பியம் முதலான இலக்கணநூல்களிலிருந்து விளக்கம் தருவது, இலக்கணம் கற்றார்க்குக் கழிபேருவகை நல்குவதாம். இங்கே சில சான்றுகள்:

‘சிவஞான போத மூலமும் சிற்றுரையும்’ என்ற பதிப்பு நூலில், உரைவேந்தர், ‘சிவஞான போதச் செம்பொருள்’ என்று. தொடக்கத்தில், நூலில் நுவலப்படும் கருத்துக்களைச் செம்பாகத் தமிழில் உரைக்கின்றார்.

சிவஞான போதத்தில், முதல் சூத்திரத்தில், ‘ஒடுங்கி மலத்து உளதாம்’ எனும் தொடர் வருகின்றது. அதற்கு விரிவான விளக்கம் தருகின்றார் உரைவேந்தர், அதில் வரும் ஒரு சிறு பகுதி:-

“உலகில் நாம் கூட்டக்கூடும் அவை(சபை) முடிந்த வழி, அவ் அவையிற் கூடியிருந்தோர் தத்தம் மனைக்குச் சென்று ஒடுங்குவர்; மீள நாம் கூட்டும்போது அவர்கள் தாம் ஒடுங்கியிருந்த மனையிலிருந்து வந்து கூடுவர். இவ் வண்ணமே இவ்வுலகமாகிய ‘அவை’யும் ஒடுங்கும் போது இறைவனிடத்திலே சென்றொடுங்கி, மீளத்தோற்று விக்கும் போது, அவனிடத்திருந்தே வந்து உலகமாகிய ‘அவை’யாய்க் காட்சியளிக்கிறது. உலகத்தை ஒடுக்கும்போது, அஃது ஒடுங்கி யிருப்பதற்குத் தானே இடமாதலால், இறைவனை ‘ஒடுங்கி’ என்று ஆசிரியர் கூறுகின்றார். ஒடுங்கிய உலகம், தான் ஒடுங்கியிருப்பதற்கு இடமான ஒடுங்கியிலிருந்தே தோன்றுவது கொண்டு ‘ஒடுங்கி உளதாம்’ என்றார். எனவே, ‘அவன், அவள், அது’ என்பவற்றின் தொகுதியாகிய அவை, ‘தோற்றிய திதி’ யாய்க் காட்சியளித்து, ஒடுங்கும் என்றும்; தான் ஒடுங்கியிருந்த ஒடுங்கியினின்றே மீள உளதாம் என்றும் தெரிவித்தவாறாயிற்று. “ஒரு நாள் கூடிய பேரவை மறுநாளும் மீளக் கூடுமாயின் நாம் என்ன நினைப்போம் முன்னாள் கூடியதன் நோக்கம் கைகூடாமையால் மறுநாளும் கூடியிருக்கிறதென்றும்; கைகூடாமைக்குக் காரண மாயிருந்த தடை முன்னாளே நீங்காது மறுநாள் கூடுவதற்குக் காரணமாயிற்றென்றும் தானே